மாளிகையை வாங்கி அதனைப் பூங்காவாக மாற்ற விரும்பும் அமெரிக்க வழக்கறிஞர்

மாளிகையை வாங்கி அதனைப் பூங்காவாக மாற்ற விரும்பும் அமெரிக்க வழக்கறிஞர்

2 mins read
7dc79ee7-b39f-4302-ac2e-dc4b5d87bffc
ஹுஸ்டன் நகரின் புகழ்பெற்ற வழக்கறிஞர் டோனி பஸ்பி, மனைவி பிரானஸ்ஸ் தம்பதி, மாளிகையை இடித்துப் பூந்தோட்டமாக்கும் திட்டத்தை இணைந்தே எடுத்துள்ளனர். - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
Google News Preferred Icon

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான டோனி பஸ்பி, S$19.7 மில்லியன் (US$15.5 மில்லியன்) விலையில் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டிருந்த 15,000 சதுர அடி பரப்பளவில் உள்ள பிரம்மாண்ட ஆடம்பர மாளிகை ஒன்றை அண்மையில் வாங்கினார்.

திரு டோனியும் அவரது மனைவி பிரான்ஸஸ் தம்பதியர் ஏற்கெனவே அந்த மாளிகை அமைந்துள்ள ‘ரிவர் ஓக்ஸ் புலவார்ட்’ பகுதியின் அருகே வாழ்ந்துவருகின்றனர். இருவரும் இணைந்தே இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சொகுசு வசதிகள் நிறைந்த அந்த மாளிகையில் வசிப்பதற்குப் பதிலாக, அதனை முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்க அவர் முடிவு செய்துள்ளார். இக் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட உயர்தரக் கட்டுமானப் பொருள்கள், அதிநவீன மின்சாதனங்கள், கதவுகள், சன்னல்கள் பற்பல மர அலங்காரப் பொருள்களைச் சேதமின்றிப் பாதுகாப்பாகப் பிரித்தெடுத்துச் சமூக நல அறநிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு ‘ஹெபிடேட் ஃ பார் ஹியுமெனிட்டி’ எனப்படும் ‘மனிதகுலத்துக்கு வாழ்விடம்’ என்ற அற அமைப்புடன் இணைந்து இத்திட்டத்தை அத்தம்பதி செயல்படுத்தவுள்ளனர்.

இவ்வாறு பிரிக்கப்படும் மதிப்புமிக்கப் பொருள்களின் ஒட்டுமொத்த மதிப்பு ஏறத்தாழ S$5.9 மில்லியன் (US$4 மில்லியன்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப் பொருள்கள் குறைந்த வருவாயைக் கொண்ட எளிய மக்களின் வீடமைப்பு உதவிகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாளிகை முற்றிலும் இடிக்கப்பட்டு நிலம் முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர், அப் பரந்த நிலப்பரப்பைப் பசுமையான ஒரு பெரிய இயற்கைப் பூங்காவாக மாற்றப்போவதாக திரு டோனி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

வழக்கறிஞரான திரு டோனி பரபரப்பான செய்கைகளுக்கு புகழ்பெற்றவர் ஆவார். முன்னாள் ராணுவ அதிகாரியான அவர் 2019ஆம் ஆண்டில் ஹுஸ்டன் மேயர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டவர்.

முன்பு ஒருமுறை ராணுவ சேவையின் பயன்பாட்டிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்த கவச வாகனம் (டாங்க்) ஒன்றை அவர் வாங்கி, அதனை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிலர் அது குறித்து புகார் அளித்த பிறகு அவர் அதனை கல்விக் கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.

ஆடம்பர மாளிகையை விலைக்கு வாங்கி அதனை முழுமையாக இடித்துவிட்டுப் பூங்காவை உருவாக்கும் இவரது இப் புதிய நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையேயும் சமூக ஊடகங்களிலும் பெரும் கவனத்தையும் வியப்பையும் ஈர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்