வர்த்தகத் தடையால் சிங்கப்பூர் வந்துசேரும் அமெரிக்க மதுபானங்கள்

வர்த்தகத் தடையால் சிங்கப்பூர் வந்துசேரும் அமெரிக்க மதுபானங்கள்

2 mins read
வர்த்தகத் தடைகள் அமெரிக்க மதுபானத் தயாரிப்பாளர்களை மாற்று சந்தைகளை நாடவைத்துள்ளது
14728e9d-800f-4f3e-9427-e177765c2221
உள்ளூர் வர்த்தகர்களுக்கு பல புதிய மதுபான வகைகள் அறிமுகம் காணவுள்ளன. - படம்: UNSPLASH

பாரம்பரியமாக அமெரிக்க மதுபானங்களை விற்பனை செய்த கனடா போன்ற நாடுகள், அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் விதித்த வர்த்தக வரிகைளை எதிர்த்து அவற்றை அந்நாட்டு சந்தைகளிலும் மதுக்கூடங்களிலும் அகற்றியுள்ளன.

கனடாவின் சில பொருள்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய 35 விழுக்காடுவரை வரிகள் விதிக்கப்பட்டன.

அமெரிக்க மக்களுக்கு மதுபானங்களின் மீதான விருப்பம் குறைந்துள்ளது.

ஆகவே, மாற்று சந்தைகளை நாடி, அமெரிக்க மதுபான தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதில் ஒன்றாக சிங்கப்பூருக்கு மதுபான ஏற்றுமதிகள் வழிமாற்றப்பட்டுள்ளன. அதன்பயனால் சிங்கப்பூர் மதுப்பிரியர்களுக்கு பல புதிய சுவைகளை அருந்திப்பார்க்கும் வாய்ப்புள்ளது.

“விஸ்கி போன்ற அமெரிக்க மதுபானங்களுக்கு கனடாவில் இடமில்லை” என்று அமெரிக்க விஸ்கி கூட்டமைப்பின் தலைவர் மைக்கல் பிலெலோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.

ஐரோப்பிய சந்தையை அடைவதும் கடினமாகிவிட்டது என அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 15 விழுக்காடு வரி விதித்தாலும் அந்நாடுகள் பதில் வரியை இன்னும் அறிவிக்கவில்லை. அதனால் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

வர்த்தகச் சந்தைகளின் நீண்டநாள் நிலைத்தன்மையை கருத்தில்கொண்டே விஸ்கி போன்ற மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று திரு மைக்கல் கூறினார்.

வெளிநாட்டு ஏற்றுமதிகள் குறைந்துள்ள நிலையில் விலைவாசியையும் பணவீக்கத்தையும் காரணங்களாக்கி, அமெரிக்கர்கள் மதுபானங்களை தற்போது அதிகம் நாடாமல் இருப்பது உள்நாட்டு விற்பனையை பெரிதும் பாதித்துள்ளது.

அமெரிக்காவில் பின்தங்கியுள்ள மதுபானங்களை முன்பு விற்பனை செய்யப்படாத நாடுகளுக்குக் கொண்டுசெல்வதை பரிசீலிப்பதாகவும் திரு மைக்கல் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) அமெரிக்க மதுபான தயாரிப்பாளர் மன்றம் (DISCUS) நடத்திய வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திரு மைக்கல் அவரது கருத்துகளை வெளியிட்டார்.

அமெரிக்க மதுபானங்களின் பன்முகத் தன்மையையும், திறனையும் புத்தாக்கத்தையும் வெளிக்காட்டும் நிகழ்ச்சியில் அத்தொழில்துறை சார்ந்த பலருடன் ஊடகங்களும் கலந்துகொண்டன.

குறிப்புச் சொற்கள்