வாஷிங்டன்: அமெரிக்காவின் இலிநோய் மாநிலத்தில் உள்ள இந்து கோயில் ஒன்றில் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது; அத்திட்டத்தைத் தெரிவித்த ஆடவர் வெள்ளையர் ஏகாதிபத்தியக் கருத்துகளைக் கொண்ட ஆவணத்தையும் பகிர்ந்திருந்தார்.
அலெக்சாண்டிரோஸ் பாப்போராக்கிஸ் என்ற அந்த 19 வயது ஆடவர் சென்ற மாதம் சிகாகோ நகரில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் கைது செய்யப்பட்டார். பலட்டின் எனும் பகுதியைச் சேர்ந்த அவர், மின்னிலக்க முறையில் தெரிவித்த தகவல்களைப் பற்றி ஒருவர் புகாரளித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக அப்பகுதிக் காவல்துறை தெரிவித்தது.
பல்வேறு குற்றச்சாட்டுகள்
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக ஆறு குற்றச்சாட்டுகளையும் பயங்கரவாதத்தில் ஈடுபட முயன்றதாக இரு குற்றச்சாட்டுகளையும் ஆயுதம் ஏந்திய வன்முறையில் ஈடுபட்டதாக இரு குற்றச்சாட்டுகளையும் பாப்போராக்கிஸ்மீது நீதிபதிகள் குழு சுமத்தியுள்ளதாக கூக் கெளன்டி காவல்துறை கூறியது. பயங்கரவாத மிரட்டல் விடுத்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளையும் நீதிபதிகள் குழு அவர்மீது சுமத்தியது.
அவர் குற்றம் புரியவில்லை என்று வாதிடப்போவதாக பாப்போராக்கிசைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் கூறினார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
நவராத்திரியின்போது தாக்குதல் நடத்தத் ‘திட்டம்’
சென்ற மாதம் நவராத்திரித் திருவிழாவின் முதல் நாளில் கோயிலில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது தெற்காசியா உட்பட அமெரிக்காவில் உள்ள இந்து சமயத்தினர் ஆகியோரிடையே பீதியை ஏற்படுத்தியது. அத்திட்டத்தை பல்வேறு அமெரிக்க அரசியல் தலைவர்கள் சாடவும் செய்தனர்.
அச்சம்பவமும் அதன் இனவாதப் பின்னணியும் தங்களுக்கு மிகுந்த கவலை தருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு சொன்னது.
பலட்டீனுக்குத் தென்மேற்கே 65 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோயிலைக் குறிவைத்து பாப்போராக்கிஸ் கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கக்கூடும் என்று விசாரணை அதிகாரிகள் நம்பியதாகக் காவல்துறை தெரிவித்தது.
பாப்போராக்கிசின் வீட்டில் விசாரணை அதிகாரிகள் சென்ற மாதம் தேடல் ஆணையைக் கொண்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது உடலைப் பாதுகாக்கும் ஆயுதக் கவசமும் வெள்ளையர் ஏகாதிபத்தியப் பயங்கரவாதத்தைக் குறிக்கும் படங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பலட்டீன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
