கலிஃபோர்னியா: அமெரிக்காவின் ராணுவ விமானமான ‘பி-52 பாம்பர்’ தெற்கு கலிஃபோர்னியாவில் விபத்துக்குள்ளானது. அதில் எட்டுப் பேர் மாண்டனர்.
விமானம் எட்வர்ட்ஸ் தளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியது. மாண்டோரில் இருவர் போயிங் நிறுவன ஊழியர்கள்.
அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை (ஜூன் 15) காலை 11.20 மணி வாக்கில் விபத்து ஏற்பட்டது. வழக்கமான சோதனைகளைச் செய்துகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.
விமானம் விபத்தான பகுதியிலிருந்து கரும்புகை எழுந்ததைப் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்தும் காணப்பட்டது.
“இன்று, எட்வார்ட்ஸ் ராணுவத் தளம் துயரமான சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளது. அதில் எட்டு அமெரிக்கர்கள் மாண்டனர். ராணுவ வீரர்கள், அரசாங்க அதிகாரிகள், அரசாங்க ஒப்பந்ததாரர்கள் மாண்டவர்களில் அடங்குவர்,” என்று ராணுவ மூத்த அதிகாரி ஜேம்ஸ் ஹேஸ் தெரிவித்தார்.
மாண்டவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாண்டோரின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் திரு ஜேம்ஸ் கூறினார்.
ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து எட்வர்ட்ஸ் தளத்தில் தற்காலிகமாகச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
விபத்து தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் விமானம் மீளமுடியாத விபத்தில் சிக்கியதாகவும் அதில் உயிர் பிழைப்பது கடினமானது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் அதற்குக் கிட்டத்தட்ட 30 நாள்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழு அறிக்கையைச் சமர்ப்பிக்க ஆறு மாதக் காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.
விபத்து குறித்து கலிஃபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம் சமூக ஊடகமான எக்ஸ் தளம் வழியாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
‘பி-52’ ரக ராணுவ விமானங்களை அமெரிக்க ராணுவம் 1950களில் இருந்து பயன்படுத்தி வருகிறது.
ஈரான்மீது குண்டு மழை பொழிய அமெரிக்கா ‘பி-52’ ரக ராணுவ விமானங்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

