வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னுரிமை கொடுக்கும் பிரச்சினைகளில் ஒன்று எல்லையை வலுப்படுத்துதல்.
இதன் அறிகுறியாக தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பீட் ஹெக்செத் திங்கட்கிழமை (பிப்ரவரி 3ஆம் தேதி) மெக்சிகோவுடனான எல்லையை பார்வையிடச் செல்கிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற ராணுவ விமானங்களைப் பயன்படுத்துவது, அவர்களை ராணுவ முகாம்களில் தங்கவைப்பது, எல்லைப் பகுதிகளுக்கு கூடுதல் படைகளை அனுப்புவது என தனது குடிநுழைவுக் கொள்கைகளை செயல்படுத்த ராணுவத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார்.
“எல்லையை நமது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் செயல்படுத்துவோம்,” என்று பீட் ஹெக்செத் அதிபர் டிரம்பைக் குறிப்பிட்டு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2ஆம் தேதி) தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்.
திரு டிரம்ப், அனைத்துலக அவசரநிலைப் பொருளியல் சட்ட அதிகாரத்தைச் சுட்டிக்காட்டி, அமெரிக்கா ஃபெட்டனில் போதைப் பொருள், சட்டவிரோதக் குடியேற்றம் போன்றவற்றால் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். அதன் எதிரொலியாக, மெக்சிகோ, கனடா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராகக் கடுமையான இறக்குமதி வரியை அந்நாடுகளின் மேல் விதித்துள்ளார்.