போகொட்டா/கொலம்பியா: அமெரிக்காவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையே அரசியல் பூசல் தொடர்கிறது.
வெனிசுவேலாவை தாக்கி, அதன் அதிபர் மதுரோவையும் அவரது மனைவியையும் கைப்பற்றி அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் அதிபர் டிரம்ப்பின் பார்வை கொலம்பியாவின் மீது திரும்பியது.
அந்நாடும் போதைப்பொருளை உற்பத்தி செய்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டிவந்தார். கொலம்பியா மீது ராணுவ நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அந்த சூழ்நிலையில் இருநாட்டு அதிபர்களான திரு டிரம்பும் திரு குஸ்தாவோ பெட்ரோவும் கடந்த புதன்கிழமை (ஜனவரி 7) தொலைபேசியில் உரையாடிக்கொண்டனர்.
அந்த உரையாடலுக்குப் பிறகு இருவரும் நற்பண்பைக் கடைப்பிடிக்கும் விதமாக நடந்துகொண்டனர். அதிபர் டிரம்ப், கொலம்பிய அதிபருடன் உரையாடியது பெருமை கொள்ளவேண்டிய தருணம் என்று வர்ணித்தார். அதிபர் குஸ்தாவோ, போதைப்பொருள் குறித்து நிலவிய சந்தேகங்களைக் களைய அந்த உரையாடல் உதவியதாகக் குறிப்பிட்டார்.
அதன்பிறகு நிலவிய அமைதியைத் தொடர்ந்து மறுநாள் வியாழக்கிழமை கொலம்பிய அதிபர் குஸ்தாவோ வழங்கிய பிபிசி ஊடக நேர்காணலில் மீண்டும் அமெரிக்கா மீது தமது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர்கள் உரையாடிய அதே நாளில் அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் ஒரு 37 வயது அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கொலம்பிய வம்சாவளியைச் சேர்ந்த மாது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை விசாரிக்கச் சென்ற ஒரு அதிகாரியை வாகனத்தைக் கொண்டு தாக்க முயன்றபோது சுடப்பட்டார் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய கொலம்பிய அதிபர், ‘நாஸி’ எனப்படும் முன்னாள் ஜெர்மனியை ஆண்ட கொடுங்கோல் ஆட்சியினர்போலவும் ஒருகாலத்தில் பொதுவுடைமையை எதிர்த்த இத்தாலியர்கள் போலவும் அமெரிக்கக் குடிநுழைவு அமலாக்க அதிகாரிகள் நடந்துகொள்கின்றனர் என்று சாடியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் அமெரிக்கா, மற்ற நாடுகளை அமெரிக்கப் பேரரசின் அடிமைகள்போல நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் அமெரிக்கா கொலம்பியா மீது வன்முறையை கட்டவிழ்த்து வந்துள்ளது என்றார் அவர். அமெரிக்கா கொலம்பியாவைத் தாக்கும் சாத்தியம் உண்மையானது என்றும் அவர் கூறியுள்ளார்.
லத்தின் அமெரிக்கர்களை மட்டுமல்லாமல் சொந்தக் குடிமக்களையும் அமெரிக்க அதிகாரிகள் குறிவைத்துத் தாக்குகின்றனர் என்று அதிபர் குஸ்தாவோ அவரது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) நடந்த சிபிஎஸ் நியூஸ் ஊடகத்துடன் நடந்த மற்றொரு நேர்காணலில் அதிபர் குஸ்தாவோ சீற்றம் தணிந்த நிலையில் வெனிசுவேலாவில் தற்காலிக அதிபர் டெல்சி ரொட்ரிகுவேஸ், அந்நாட்டு எதிர்க்கட்சியுடன் கூட்டாட்சி செய்யும் அமெரிக்க அதிபர் டிர்ம்ப்பின் திட்டத்தை ஆதரிக்கும் விதத்தில் பேசியிருந்தார்.
இரு அதிபர்களும் வருகின்ற பிப்ரவரி மாத முதல் வாரம் வெள்ளை மாளிகையில் நேருக்கு நேர் சந்திக்க ஏற்பாடு நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

