சேலம்: ரோட்ஸ் தீவின் புரோவிடன்ஸ் நகர பிரௌன் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 13 துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்று பலரைக் காயப்படுத்திய குற்றவாளி, தற்கொலை செய்துகொண்டதாக அமெரிக்க சட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கொலைகளையும் இரண்டு நாள் கழித்து நடந்த பள்ளி பேராசிரியரின் மற்றொரு கொலையின் தொடர்பிலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிற வேளையில் வியாழக்கிழமை (டிசம்பர் 18) அவனது உடல் ஒரு சரக்குக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாஸ்டன் நகரின் வழக்கறிஞர் லியே ஃபொலி என்பவரின் சட்ட அலுவலகப் பேச்சாளர் கிரிஸ்டீனா ஸ்டர்லிங் இதனைக் குறித்து விவரங்கள் வெளியிட்டுள்ளார்.
பாஸ்டன் நகரிலிருந்து 30கிலோமீட்டர் வடக்கில் உள்ள சேலம் நகரில் காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமையன்று தேடுதல் வேட்டையில் இருந்தபோது அவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இரண்டு அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணை தொடர்வதால், தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத நீதித் துறை அதிகாரி, சந்தேக நபர் தன்னையே சுட்டுக்கொண்டு மாண்டுள்ளதாகக் கூறினார். மாண்ட நபரின் முழு விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

