நியூயார்க்: அமெரிக்கப் போர் வீரர்களை கௌரவிக்கும் நினைவு நாள் விருந்துகளில் அமெரிக்கர்கள் கலந்துகொள்ளும் வேளையில் விலைவாசி உயர்வு பற்றிய அவர்களுடைய கவலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பெரும்பாலான ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர், தனிப்பட்டவர்கள் தங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களாக பல்பொருள் கடைகளில் வாங்கும் பொருள்களை மாற்றியமைத்துள்ளதாக சிஎன்என் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
மேலும் 59 விழுக்காடு அமெரிக்கர்கள் கூடுதல் செலவுகளையும் பொழுதுபோக்கு செலவுகளையும் குறைத்துள்ளனர்.
குடியரசுக் கட்சியினரில் 55 விழுக்காட்டினர் உட்பட அமெரிக்கர்களில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கொள்கைகளால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அமெரிக்கர்கள் நிச்சயமற்ற நிதி நிலையை உணர்ந்து இருப்பதையும் பல ஆய்வுகள் காட்டுகின்றன.
வாக்காளர்களில் ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்டோர் பொருளாதாரத்துக்கு மிகக் குறைவான மதிப்பீடான ‘மோசம்’ என்று அண்மைய நியூயார்க் டைம்ஸ்/ சியனா கருத்துக் கணிப்பில் குறிப்பிட்டுள்ளனர். இது, ஜனவரி மாதத்திலிருந்து 11 புள்ளிகள் கூடியிருப்பதைக் காட்டுகிறது.
அது மட்டுமல்லாமல் பொருளாதாரம் மீதான நம்பிக்கை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது என்று காலப் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் எரிவாயு விலை கூடி வருகிறது. ஒரு கேலன் பெட்ரோல் 4.50 டாலருக்கு அதிகரித்துள்ளது. ஒரு கேலன் என்பது 3.8 லிட்டராகும்.
தொடர்புடைய செய்திகள்
ஃபாக்ஸ் நியூஸ் கருத்துக் கணிப்பின்படி பெரும்பாலான குடியரசுக் கட்சியினர் உட்பட கிட்டத்தட்ட 80 விழுக்காடு வாக்காளர்கள் விலை உயர்வுக்கு டிரம்ப் நிர்வாகமே காரணம் என்று கூறியுள்ளனர்.
இதற்கு எண்ணெய் நிறுவனங்கள், ஈரான் போர், அரசாங்க ஒழுங்குமுறைகளை அவர்கள் குறை கூறினர்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஃபாக்ஸ் கருத்துக் கணிப்பில் வாக்காளர்களில் 57 விழுக்காட்டினர் டிரம்ப்பின் கொள்கைகள் நாட்டிற்குத் தீங்கு ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளனர். இது, ஓராண்டுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் 51 விழுக்காட்டிலிருந்து கூடியுள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

