அமெரிக்காவின் புதிய கெடுபிடி: இந்திய, பிலிப்பீன்ஸ் நிறுவனங்கள் கவலை

அமெரிக்காவின் புதிய கெடுபிடி: இந்திய, பிலிப்பீன்ஸ் நிறுவனங்கள் கவலை

2 mins read
வாடிக்கையாளர் சேவை நிலையங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் பரிந்துரை
2912d698-d18c-4190-b659-f1ddbc01f17a
2024 ஏப்ரலில் மணிலா நகரில் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள். அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் அந்நாட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவைப் பணிகளை வெளிநாடுகளுக்கு வழங்கும் போக்கு இனி குறையும் என்று அஞ்சப்படுகிறது. - கோப்புப் படம்: புளூம்பெர்க்

ணிலா/புதுடெல்லி: அமெரிக்க நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் சேவைப் பணிகளை (Call Centre jobs) வெளிநாடுகளுக்கு வழங்குவதைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் மத்திய தகவல்தொடர்பு ஆணையம் (FCC) புதிய திட்டங்களை ஆலோசித்து வருகிறது. இதனால், உலகின் ஆகப் பெரிய வாடிக்கையாளர் சேவை நடுவங்களான பிலிப்பீன்ஸ், இந்தியா இரண்டிலுமுள்ள இத்துறை ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இவ்விரு நாடுகளிலும் மில்லியன்கணக்கானோர் அமெரிக்க நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் சேவை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிலிப்பீன்சிலும் இந்தியாவிலும் பில்லியன்கணக்கான டாலர் மதிப்பிலான ஏற்றுமதி வருவாய் அமெரிக்கச் சந்தைகளுடன் தொடர்புடையதாக விளங்குகிறது.

முன்னதாக, அமெரிக்க நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் சேவைப் பணிகளை மீண்டும் அமெரிக்காவிலிருக்கும் ஊழியர்களுக்கே வழங்கவேண்டும் என்று இவ்வாண்டுத் தொடக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதன் தொடர்பில் ஆணையம், ஜூன் 22ஆம் தேதிவரை அமெரிக்கப் பொதுமக்களிடம் கருத்து சேகரித்துவருகிறது.

அமெரிக்க வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும் மோசடிகளைத் தடுக்கவும் கொண்டுவரப்படும் இத்திட்டம், மறைமுக வர்த்தகத் தடையாகப் பார்க்கப்படுகிறது.

இதன்கீழ், அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பேசும் ஊழியர்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்துவது, அந்த ஊழியர்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டியது கட்டாயம் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

இந்தக் கட்டுப்பாடுகள் பிலிப்பீன்ஸ், இந்தியாவின் பொருளியலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. பிலிப்பீன்சில் இத்துறையில் ஏறக்குறைய 1.8 மில்லியன் பேர் பணிபுரிகின்றனர். மேலும், ஆண்டுக்கு 38 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டப்படுகிறது.

இந்தியாவில் சென்ற நிதியாண்டில் இத்தகைய வருவாய் கிட்டத்தட்ட 59 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது. இரண்டு நாடுகளுக்குமே அமெரிக்காதான் மிகப் பெரிய சந்தையாகும்.

கிட்டத்தட்ட 70 விழுக்காட்டு அமெரிக்க நிறுவனங்கள் ஏதாவதொரு வர்த்தக நடவடிக்கையையாவது வெளிநாடுகளிலுள்ள ஊழியர்கள் மூலம் மேற்கொள்கிறது. செலவுக் குறைப்பும் செயல்திறன் அதிகரிப்பும் இதற்குக் காரணங்கள்.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிலிப்பீன்ஸ், இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளன.

பிலிப்பீன்ஸ் அரசு தனது நாட்டுக்கு இதில் விலக்கு அளிக்கக் கோரி அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. இந்தியத் தரப்பில், நம்பகமான வெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியலை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்கெனவே வேலை இழப்பு அச்சத்தில் இருக்கும் வாடிக்கையாளர் சேவை நிலைய ஊழியர்களுக்கு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உயர்பதவிகளில் இருக்கும் மேலாளர்கள் தங்களின் வேலைப்பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்