அமெரிக்காவின் காரணங்களில் உண்மையில்லை: உலக சுகாதார நிறுவனம்

1 mins read
d09a3bf3-a6bf-4a53-ab3b-6cdd741553eb
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் (நடுவில்). - கோப்புப் படம்: ஏஎஃப்பி

ஜெனீவா: உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுவதற்காக அமெரிக்கா தெரிவித்துள்ள காரணங்களில் உண்மையில்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனாம் தெரிவித்துள்ளார். இவ்வாரம், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. “அமெரிக்காவின் முடிவு உலகத்திற்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்துகிறது. “துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா விலகுவதற்கு அது தெரிவித்துள்ள காரணங்களில் உண்மையில்லை,” என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனம் எப்போதும் அமெரிக்காவுடனும் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் சேர்ந்து செயல்பட்டு வந்ததாகவும் டெட்ரோஸ் அதனாம் தெரிவித்துள்ளார். இம்மாதம் 22ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சுகாதார அமைச்சர் ராபர்ட் எஃப். கென்னடியும் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா அதிகாரபூர்வமாக விலகுவதாக கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின்போது அந்நிறுவனம் ஏராளமான தோல்விகளைச் சந்தித்ததாகவும் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக அது செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் அமெரிக்காவின் விலகல் நடைமுறைக்கு வந்துவிட்டதா என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்