அபாய அளவில் நீர்நிலைகள்; குளிக்கும் நேரத்தைப் பாதியாகக் குறைக்க அறிவுறுத்து

அபாய அளவில் நீர்நிலைகள்; குளிக்கும் நேரத்தைப் பாதியாகக் குறைக்க அறிவுறுத்து

2 mins read
43f75349-d112-492f-a4c4-bc1f7bd4e440
தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சான்டியாகோ. - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: சுங்கை மூடா போன்ற முக்கிய நீர்நிலைகள் தொடர் வெப்ப அலை காரணமாக அபாய அளவுக்குக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதால், மலேசியர்கள் உடனடியாகத் தங்கள் குளிக்கும் நேரத்தைப் பாதியாகக் குறைக்கவும் தினமும் தங்கள் வாகனங்களைக் கழுவும் பழக்கத்தை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என நாட்டின் உயர்மட்ட நீர் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (ஸ்பேன்) தலைவர் சார்லஸ் சான்டியாகோ, “பெரும்பாலும் கவனிக்கப்படாத இந்த அன்றாடப் பழக்கவழக்கங்கள் மூலம், நீர் விநியோகம் குறைந்துவரும் இக்காலத்தில், மில்லியன் கணக்கான லிட்டர் நீர் வீணாகிறது,” என்றார்.

“கார் கழுவுதல், தோட்ட வேலைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் குளிக்கும் நேரத்தை 50 விழுக்காடு குறைத்துக் கொள்ளுங்கள்,” என்று அவர் மலாய் மெயிலிடம் கூறினார்.

மலேசியர்கள் சிலர் தினமும் தங்கள் வாகனங்களைக் கழுவுவதாகக் கூறிய சான்டியாகோ, கார் கழுவுவதை நீர் விரயத்தின் ஒரு முக்கிய ஆதாரமாகக் குறிப்பிட்டார்.

“ஒரு மில்லியன் கார்களை எடுத்து, ஒரு முறை கழுவுவதற்கு ஒரு காருக்கு கிட்டத்தட்ட 25 லிட்டர் தண்ணீர் என்று கணக்கிட்டால், ஒரு மில்லியன் கார்களைக் கழுவ வாரத்திற்கு கிட்டத்தட்ட 25 மில்லியன் லிட்டர் தண்ணீர் செலவாகும்,” என்று அவர் விளக்கினார்.

மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு, தங்கள் வாகனங்களைக் குறைவாகக் கழுவ வேண்டும்.

இலைகளைப் பளபளப்பாக வைத்திருக்க அதிகமாகத் தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பதிலாக, செடிகள் உயிர் பிழைப்பதை உறுதிசெய்ய வேர்களுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றுமாறு அறிவுறுத்தி, தோட்டக்கலைப் பழக்கங்களிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க அவர் அழைப்பு விடுத்தார்.

அதிகத் தண்ணீர் பயன்பாட்டில் இருக்கும் இந்த தேசியப் பழக்கம் தரவுகளில் பிரதிபலிக்கிறது.

மலேசியாவில் ஒரு நாளில் ஒருவர் சராசரியாக 201 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகின்றார் என்றும் இது ஐநா பரிந்துரைத்த 165 லிட்டரை விடக் கணிசமான அளவு அதிகம் என்றும் சான்டியாகோ சுட்டிக்காட்டினார். இந்த அளவு, சிங்கப்பூர் (140 லிட்டர்) மற்றும் தாய்லாந்து (90 லிட்டர்) போன்ற அண்டை நாடுகளை விடவும் மிகவும் அதிகமாக உள்ளது.

தண்ணீர்ச் சிக்கனத்திற்கு அழைப்பு விடுத்த அவர், கடும் வெப்பத்தின்போது உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கப் பொதுமக்கள் தொடர்ந்து போதுமான அளவுக்கு நீர் அருந்துமாறு வலியுறுத்தினார்.

“பயன்பாட்டைக் குறைக்கலாம், ஆனால், நீரிழப்பு ஏற்பட அனுமதிக்காதீர்கள். அளவுக்கு மீறிய பயன்பாட்டை மட்டும் தவிர்க்கவும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்