கோலாலம்பூர்: நெகிரி செம்பிலான் மாநில முதல்வராக அமினுதின் ஹாருன் தொடர்ந்து நீடிப்பார் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 28) தெரிவித்தார்.
நெகிரி செம்பிலானின் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரைத் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) தாம் சந்தித்தபோது இதனைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.
“நான் திங்கட்கிழமை துவாங்கு முஹ்ரிசைச் சந்தித்தேன். மாநிலத்தின் நலனையும் மக்களின் நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு, அமினுதின் முதல்வராக நீடிக்க வேண்டும் என்ற அவரது பரிசீலனைக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன்.
“தற்போதைய நிலையில், ஆட்சியாளர் வழங்கிய ஆணையின் அடிப்படையில், ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படும் வரை மாநில அரசு வழக்கம் போல் செயல்பட வேண்டும்.
“தற்போதைக்கு, முதல்வர் வழக்கம்போல் செயல்படுமாறு நான் கேட்டுக்கொண்டுள்ளேன். சட்டரீதியான நடவடிக்கைகள் இதற்குத் தடையாக இல்லை, நாங்களும் அதைத் தடுக்க மாட்டோம். நாம் பேணிப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர் அல்லது வட்டாரத் தலைவர்கள் (உண்டாங்) அமைப்பைப் பாதிக்காமல், அது முறையாக நடைபெற வேண்டும்,” என்றார் திரு அன்வார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற ‘தெமு அன்வார்’ அமர்வு மற்றும் யுசிஎஸ்ஐ பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடத் திட்டத் தொடக்கவிழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.
அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் நெருக்கடி தீர்க்கப்படும்
இதற்கிடையே, நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடி, அரசியல் வழிகளிலேயே தீர்க்கப்படும் என்று அம்னோ தலைவர் அகமது ஸாஹித் ஹமிடி செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 28) தெரிவித்தார்.
மாநில அரசின் நிர்வாகத்திலோ அல்லது நெகிரி செம்பிலானின் ‘அடாட்’ சட்டங்கள் தொடர்பான விஷயங்களிலோ தங்கள் கட்சி ஒருபோதும் தலையிட்டதில்லை என்று துணைப் பிரதமருமான ஸாஹித் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“நெகிரி செம்பிலானில் ஒரு நிலையான அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்குச் சேவையாற்றுவதையும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் உறுதிசெய்ய, நாங்கள் சிறந்த தீர்வைக் காண்போம்,” என்று அவர், ஏப்ரல் 28ஆம் தேதி சைபர்ஜெயாவில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் அமலாக்க நாள் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
முதல்வர் அமினுதின் ஹாருன் தலைமையிலான மாநில அரசாங்கத்திற்கான ஆதரவை நெகிரி செம்பிலானில் உள்ள 14 பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக மீட்டுக்கொண்ட நிலையில், திரு ஸாகித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

