லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் முன்னாள் பயிற்றுவிப்பாளராக பல வெற்றிக் கிண்ணங்களை அள்ளிக் குவித்தவர் 83 வயதாகும் ‘சர்’ அலெக்ஸ் ஃபெர்கசன்.
தற்போதுள்ள நிலையில் அக்குழு பிரிமியர் லீக் கிண்ணத்தைக் கைப்பற்ற பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று அவர் கணித்திருந்தார். அவர்களது முக்கிய போட்டியாளரான லிவர்பூல் 30 ஆண்டுகளுக்குப் பின் பிரிமியர் லீக் போட்டியை வென்றதுபோன்று மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கும் ஏற்படலாம் என்று ஃபெர்கசன் ஊடகப் பேட்டியில் அண்மையில் கூறியிருந்தார்.
கடைசியாக காற்பந்து பயிற்றுவிப்பாளராக இருந்து கடந்த 2013ஆம் ஆண்டில் அவர் ஓய்வு பெற்றபோது, அந்த பிரசித்தி பெற்ற பிரிமியர் லீக் போட்டியின் வெற்றியாளராகவே வெளியேறினார். அதற்குப் பிறகு அக்குழு அந்தப் போட்டியை இதுவரையில் 12 ஆண்டுகள் ஆகியும் வென்றதில்லை.
இருப்பினும் தற்போதைய பயிற்றுவிப்பாளர் ரூபென் அமொரிம், மான்செஸ்டர் யுனைடெட் குழு வெகு காலம் வெற்றிக்கு காத்திருக்க வேண்டியதில்லை என்று நம்பிக்கை அளித்துள்ளார்.
“என்னைவிட இங்கிலீஷ் காற்பந்தை ஃபெர்கசன் நன்கு அறிந்தவர். ஆனால் நான் இங்கு இருந்தாலும் இல்லையென்றாலும் மற்றொரு பயிற்றுவிப்பாளரின் தலைமையில் இக்குழு சில ஆண்டுகளில் பிரிமியர் லீக் போட்டியில் வெற்றிபெறும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்” என்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) அமொரிம் கூறியுள்ளார்.
அமொரிம் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் பயிற்றுவிப்பாளராக பதவியேற்றார். இதுவரையில் அவரின் தலைமையில் அக்குழுவின் ஆட்டம் ஏற்ற இறக்கமாகவே இருந்துள்ளது.
ஐரோப்பா லீக் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இவ்வாண்டு மே மாதம் அவர் குழுவை வழிநடத்திச் சென்றாலும் சக பரிமியர் லீக் குழுவான டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ் குழுவிடம் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் மான்செஸ்டர் யுனைடெட் குழு தோல்வியுற்றது.

