மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவரானார் ஆனந்த் ராஜ்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவரானார் ஆனந்த் ராஜ்

படம்: சேம்பர்ஸ்.காம்

15 Mar 2026 - 2:46 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் ஆனந்த் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்றத்தின் துணைத் தலைவராக இருந்த ஆனந்த் ராஜ், சனிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்ற 80வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் 2026/2027ஆம் ஆண்டுத் தவணைக்கான புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முர்ஷிதா முஸ்தபா துணைத் தலைவராகவும் ஆர். ஜெயபாலன் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டத்தில் 433 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்வைக்கப்பட்ட 11 தீர்மானங்களில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தலைமை வழக்கறிஞர், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆகிய பதவிகளைத் தனித்தனியாகப் பிரிக்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

“நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த இவ்விரு பதவிகளும் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம். இது தொடர்பான புதிய சட்ட மசோதாவில், நிர்வாகத் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதில் வழக்கறிஞர் மன்றம் உறுதியாக உள்ளது,” என்றார் திரு ஆனந்த் ராஜ்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்கவும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள மன்றம் தொடர்ந்து வலியுறுத்தும் என அவர் உறுதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாவழக்கறிஞர்தலைவர்கோலாலம்பூர்