இஸ்ரேலுடனான கசப்புணர்வு முற்றியது; தனது தூதரை நிரந்தரமாக திரும்பப் பெற்றது ஸ்பெயின்

இஸ்ரேலுடனான கசப்புணர்வு முற்றியது; தனது தூதரை நிரந்தரமாக திரும்பப் பெற்றது ஸ்பெயின்

2 mins read
d25acd76-d7a2-45a2-9505-e651eb748d3b
ஸ்பெயின் மற்றும் இஸ்‌ரேல் இடையிலான அரசதந்திர மோதல் மோசமடைந்துள்ளது. - படங்கள்: ராய்ட்டர்ஸ்

மட்ரிட்: ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஸ்பெயின் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர மோதல் முற்றியுள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலுக்கான தனது தூதரை ஸ்பெயின் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 10) நிரந்தரமாகத் திரும்பப் பெற்றது.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் தனது துறைமுகங்கள் அல்லது வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் தடை விதித்தது. இது தொடர்பாக ஏற்பட்ட கசப்புணர்வின் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் ஸ்பெயின் தூதர் ஆலோசனைக்காகத் திரும்ப அழைக்கப்பட்டார். ஸ்பெயினின் இந்த நடவடிக்கையை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியன் சார் (Gideon Sa’ar) யூத எதிர்ப்பு நடவடிக்கை என்று சாடினார்.

இந்நிலையில், தூதரின் பதவி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக ஸ்பெயின் தனது அதிகாரபூர்வ அரசிதழில் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) அறிவிப்பு வெளியிட்டது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள ஸ்பானியத் தூதரகம் இனி ஒரு தற்காலிகப் பொறுப்பாளரால் வழிநடத்தப்படும் என்று ஸ்பானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 அக்டோபரில் காஸாவில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தற்போதைய நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கும் ஸ்பெயினின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த மே மாதம் இஸ்ரேல் தனது தூதரைத் திரும்பப் பெற்றது. தற்போது ஸ்பெயினுக்கான இஸ்ரேலியத் தூதரகமும் தற்காலிகப் பொறுப்பாளரால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில், போரை எதிர்ப்பதற்காக ஸ்பெயின் கொடுங்கோலர்களுடன் நிற்பதாக கிடியன் சார் குற்றம் சாட்டினார்.

குறிப்புச் சொற்கள்