மினியபொலிசில் மற்றோர் அமெரிக்கக் குடிமகன் அதிகாரியால் சுட்டுக்கொலை

2 mins read
25b77c9a-44bf-47cc-8723-8d7dff8f0638
அமெரிக்காவின் மத்திய அரசாங்க அதிகாரிகள் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

மினியபொலிஸ்: மினியபொலிசில் ஓர் அமெரிக்கக் குடிமகனை மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி சுட்டுக் கொன்றதால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இது, இம்மாதம் நடந்துள்ள இரண்டாவது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாகும்.

உள்ளூர் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சட்டவிரோதக் குடியேறிகளைப் பிடிப்பதற்காக மத்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் தங்களை நோக்கித் துப்பாக்கியுடன் வந்த நபரை தற்காப்புக்காகச் சுட்டதாக மத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் ராய்ட்டர்சிடம் வழிப்போக்கர் ஒருவர் காட்டிய காணொளியில், அலேக்ஸ் பிரெட்டி என்ற அந்த 37 வயது நபரின் கையில் கைப்பேசி மட்டுமே இருந்தது, துப்பாக்கி அல்ல.

அதிகாரிகளால் தரையில் தள்ளப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு அவர் உதவ முயற்சி செய்கிறார். அதிகாரிகள், ஒரு பெண்ணைத் தள்ளிவிடுவதும் மற்றோர் ஆடவரைத் தரையில் தள்ளுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

பெண்ணுக்கும் அதிகாரிக்கும் இடையே பிரெட்டி நகர்ந்து செல்கிறார். அப்போது அதிகாரி ஒருவர் மிளகுத் தூளைத் தூவியதால் அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விதமாகத்திரும்பிக் கொள்கிறார்.

பின்னர் திரும்பி கீழே விழுந்த பெண்ணுக்கு அவர் உதவி செய்கிறார். அந்தச் சமயத்தில் அதிகாரி தொடர்ந்து மிளகுத் தூளைத் தூவுகிறார்.

பிரெட்டி, அந்தப் பெண்ணைத் தூக்கும்போது அதிகாரி ஒருவர், அவளிடமிருந்து அவரை இழுத்துச் செல்கிறார். பல அதிகாரிகள் பிரெட்டியை கை,கால்களை மடக்கி வலுக்கட்டாயமாகப் பிடிக்கின்றனர். அந்த சமயத்தில் அவரிடம் துப்பாக்கி இருப்பதாக யாரோ ஒருவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அதிகாரி ஒருவர் பிரெட்டியிடமிருந்து துப்பாக்கியை அகற்றுவதுபோல ஒரு காணொளி காட்டியது.

சிறிது நேரத்தில் பிரெட்டியின் முதுகை நோக்கி கைத்துப்பாக்கியை நீட்டிய அதிகாரி ஒருவர் நான்கு முறை சுடுகிறார். திரு. பிரெட்டியை நோக்கி மற்றோர் அதிகாரியும் சுடும் பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கின்றன.

சாலையில் கிடந்த திரு. பிரெட்டியைப் பார்த்து அதிகாரிகள் அனைவரும் விலகிச் சென்றனர். ஒரு சிலர் மட்டும் திரு. பிரெட்டிக்கு மருத்துவ உதவி செய்கின்றனர். ஆனால் துப்பாக்கியை அகற்றிய பிறகு அவர் ஏன் சுடப்பட்டார் என்பது தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், அவர், துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியைப் பெற்றிருந்தாகச் சொல்லப்படுகிறது. மத்திய பாதுகாப்புப் படையினர் எக்ஸ் தளத்தில் ஒரு துப்பாக்கிப் படத்தை வெளியிட்டுள்ளனர். அது, பிரெட்டியிடமிருந்து பறிக்கப்பட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் தாதியராகப் பணியாற்றும் திரு பிரெட்டி சுட்டுக் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

அதிகாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் அவர்களை கலைக்க முயற்சி செய்தனர்.

நியூயார்க், வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ உட்பட இதர நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

மேலும் மத்திய அதிகாரிகளுக்கும் மாநில அதிகாரிகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இம்மாதம் 7ஆம் தேதி ஓர் அமெரிக்கரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

குறிப்புச் சொற்கள்