இந்தோனீசியாவில் மேலும் ஒரு கப்பலில் தீ; இளம்பெண் உயிரிழப்பு

இந்தோனீசியாவில் மேலும் ஒரு கப்பலில் தீ; இளம்பெண் உயிரிழப்பு

1 of 2
படம்; ஏஎஃப்பி
படம்: ராய்ட்டர்ஸ்

12 Aug 2026 - 12:12 pm

2 mins read

மாத்தாராம் (இந்தோனீசியா): பாலித்தீவிற்கு அருகே தீப்பற்றி எரிந்த பயணக் கப்பலில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் கடற்படைக் கப்பலும் பிற படகுகளும் தீவிரமாக ஈடுபட்டதாக இந்தோனீசிய அதிகாரிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்தனர்.

அண்மை நாள்களில் நிகழ்ந்த இரண்டாவது கப்பல் தீ விபத்து இதுவாகும்.

இச்சம்பவத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்; ஆஸ்திரேலிய சுற்றுப்பயணிகள் உட்பட 172 பேர் மீட்கப்பட்டனர்.

பாலித்தீவிற்கு அருகிலுள்ள லொம்போக் தீவுக்குச் சென்றுகொண்டிருந்த அந்தப் பயணக் கப்பலில் அதிகாலை வேளையில் தீப்பற்றியது.

கடற்படைக் கப்பல், மற்றொரு பயணக் கப்பல் உட்பட குறைந்தது மூன்று வெவ்வேறு கப்பல்கள் மூலம் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் என்று லொம்போக் தீவிலுள்ள மாத்தாரம் தேடல், மீட்பு முகமையின் தலைவர் முகம்மது ஹரியாடி கூறினார்.

தேடல், மீட்புக் கலங்கள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாகவும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கப்பலிலிருந்து தப்பித்த ஒருவரான கிக்கி ஆக்டா பிரதிக்கா, 25, உயிர்காப்பு அங்கியை அணிந்துகொண்டு கடலில் குதித்துத் தப்பினேன் என்றும் தம்மைப்போல் வேறு சில பயணிகளும் கடலில் குதித்துத் தப்பினர் என்றும் சொன்னதாக ‘ஏஎஃப்பி’ செய்தி தெரிவித்தது.

கடந்த வாரம், ஜாவா தீவுக்கு அருகே பயணக் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக, ஜூலை மாதத்தில் சுலாவேசிக்குத் தெற்கே உள்ள சிறிய தீவான செலாயார் அருகே 70க்கும் மேற்பட்டோருடன் சென்றுகொண்டிருந்த பயணக் கப்பல் ஒன்று மூழ்கியது. அதிலிருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன. ஆயினும், 14 பேரின் நிலை என்னவானது என இன்னும் தெரியாத நிலையில், மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது.

குறிப்புச் சொற்கள்