மாத்தாராம் (இந்தோனீசியா): பாலித்தீவிற்கு அருகே தீப்பற்றி எரிந்த பயணக் கப்பலில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் கடற்படைக் கப்பலும் பிற படகுகளும் தீவிரமாக ஈடுபட்டதாக இந்தோனீசிய அதிகாரிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்தனர்.
அண்மை நாள்களில் நிகழ்ந்த இரண்டாவது கப்பல் தீ விபத்து இதுவாகும்.
அப்படகில் குறைந்தது 114 பேர் இருந்த நிலையில், உயிருடற்சேதம் நிகழ்ந்ததாகத் தகவல் இல்லை.
பாலித்தீவிற்கு அருகிலுள்ள லொம்போக் தீவுக்குச் சென்றுகொண்டிருந்த அந்தப் பயணக் கப்பலில் அதிகாலை வேளையில் தீப்பற்றியது.
கடற்படைக் கப்பல், மற்றொரு பயணக் கப்பல் உட்பட குறைந்தது மூன்று வெவ்வேறு கப்பல்கள் மூலம் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் என்று லொம்போக் தீவிலுள்ள மாத்தாரம் தேடல், மீட்பு முகமையின் தலைவர் முகம்மது ஹரியாடி கூறினார்.
தேடல், மீட்புக் கலங்கள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாகவும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“உயிருடற்சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. நாங்கள் கப்பலை நெருங்கி, பயணிகள் எவரும் கப்பலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்,” என்று மெட்ரோ டிவியிடம் திரு ஹரியாடி தெரிவித்தார்.
கடந்த வாரம், ஜாவா தீவுக்கு அருகே பயணக் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக, ஜூலை மாதத்தில் சுலாவேசிக்குத் தெற்கே உள்ள சிறிய தீவான செலாயார் அருகே 70க்கும் மேற்பட்டோருடன் சென்றுகொண்டிருந்த பயணக் கப்பல் ஒன்று மூழ்கியது. அதிலிருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன. ஆயினும், 14 பேரின் நிலை என்னவானது என இன்னும் தெரியாத நிலையில், மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது.


