தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் ஆளை விழுங்கும் இன்னொரு குழி

2 mins read
3838c131-e7fe-4f1d-9334-0faafc4d3496
புதிய குழியைச் சுற்றிலும் தடுப்புகளை வைத்து மறைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள். - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியா சாலையில் அண்மையில் 8 மீட்டர் ஆழமுள்ள குழிக்குள் பெண் ஒருவர் விழுந்த இடத்தின் அருகே மற்றொரு புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புதன்கிழமை (ஆகஸ்ட் 28) அதிகாலை 2.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்ட அக்குழி, முதல்நாள் இரவு பெய்த பலத்த மழையால் ஏற்பட்டு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க, கோலாலம்பூர் சிட்டி ஹால் நிர்வாகத்தினர் அந்தக் குழியைச் சுற்றி மறைத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) கோலாலம்பூரில் ஏற்பட்டு இருந்த ஆழ்குழியில் 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விழுந்தார். அந்தக் குழியின் ஆழம் 8 மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரைத் தேடும் பணி புதன்கிழமை ஆறாம் நாளாகத் தொடர்ந்தது.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் என்னும் பகுதியில் இருந்து சுற்றுப்பயணியாக மலேசியா வந்த அந்தப் பெண்ணின் பெயர் விஜயலட்சுமி என்று அடையாளம் காணப்பட்டது.

முன்னதாக, கடுமையான மழை காரணமாக தேடுதல் பணி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) இரவு 7 மணியளவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

புதன்கிழமை காலை 9.05 மணியளவில் அந்தப் பணி மீண்டும் தொடங்கியது.

புதிதாக ஏற்பட்டு உள்ள குழி, அந்தப் பெண் விழுந்த இடத்தில் இருந்து ஏறத்தாழ 50 மீட்டர் தொலைவில் உள்ளது. அதனைக் காவல்துறை ஓசிபிடி பிரிவின் உதவி ஆணையாளர் சுலீஸ்மி அஃபென்டி சுலைமான் உறுதிசெய்தார்.

குறிப்புச் சொற்கள்