பிலிப்பீன்ஸ் துணை அதிபர்மீது மீண்டும் அரசியல் குற்றச்சாட்டு

பிலிப்பீன்ஸ் துணை அதிபர்மீது மீண்டும் அரசியல் குற்றச்சாட்டு

2 mins read
e5d92bde-eddd-4bdf-a4e7-75db3805f496
பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டர்டே - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டர்டே மீது மீண்டும் அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் மக்களவை, அவர்மீது திங்கட்கிழமை (மே 11) அரசியல் குற்றச்சாட்டைக் கொண்டுவந்தது.

பிலிப்பீன்சில் துணை அதிபர் ஒருவர் மீது அரசியல் குற்றச்சாட்டு இரண்டாவது தடவையாகச் சுமத்தப்படுவது இதுவே முதன்முறை.

இருப்பினும் அவரின் ஆதரவாளர்கள், செனட் சபையை அவர்களின் கட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகின்றனர். பிலிப்பீன்சில், அடுத்த அதிபர் தேர்தல் 2028ஆம் ஆண்டு நடைபெற்றாக வேண்டும். இந்நிலையில் திருவாட்டி டுட்டர்டே மீதான இரண்டாம் அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சுமத்தப்பட்ட முதல் அரசியல் குற்றச்சாட்டை, அரசமைப்புச் சட்ட நடைமுறைச் சிக்கல்களைக் காரணங்காட்டி உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

மே 11ஆம் தேதி, திருவாட்டி டுட்டர்டே மீது அரசியல் குற்றச்சாட்டைக் கொண்டுவருவதற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களில் 257 பேரும் எதிராக 25 பேரும் வாக்களித்தனர். ஒன்பது பேர், வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. இருப்பினும் அவரைப் பதவியிலிருந்து அகற்ற அது வழிவிடாது. இனி வழக்கு செனட் சபைக்குச் செல்லும். செனட் சபை, நீதிமன்றமாகச் செயல்பட்டுத் திருவாட்டி டுட்டர்டேயை குற்றவாளி என அறிவிப்பதா விடுவிப்பதா என்பதை முடிவுசெய்யும்.

குற்றவாளி எனத் தீர்மானிக்க மொத்தமுள்ள செனட்டர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அதாவது 16 வாக்குகள் ஆதரவாக இருக்கவேண்டும். ஆனால் திருவாட்டி டுட்டர்டே பதவியில் நீடிக்க ஒன்பது வாக்குகளே போதுமானது. அவ்வாறு நடந்தால் அவரால் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். அதற்கு விருப்பம் இருப்பதாக இவ்வாண்டு (2026) பிப்ரவரியில் திருவாட்டி டுட்டர்டே அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்