அமைச்சரவையிலிருந்து விலக முன்வந்த ஆண்டனி லோக்கின் முடிவு அவருடைய சொந்த முடிவு: காலிட் நோர்டின்

அமைச்சரவையிலிருந்து விலக முன்வந்த ஆண்டனி லோக்கின் முடிவு அவருடைய சொந்த முடிவு: காலிட் நோர்டின்

படம்: பெர்னாமா

20 Sep 2026 - 4:51 pm

2 mins read

கோத்தா திங்கி: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் பெற்ற நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் பதவி விலக முன்வந்தது முற்றிலும் அவரது தனிப்பட்ட விவகாரம் என்று அம்னோ உதவித் தலைவர் முகமது காலிட் நோர்டின் ஞாயிற்றுக்கிழமை (செம்டம்பர் 20) கூறியுள்ளார்.

அரசியல் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக மற்ற ஜனநாயகச் செயல் கட்சி (டிஏபி) அமைச்சர்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்கும் அதே வேளையில், நஜிப் தமது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டிஏபியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு திரு லோக் சனிக்கிழமை (செப்டம்பர் 19) பதவி விலக முன்வந்தார்.

“அம்னோவின் கண்ணோட்டத்தில், அது அவரது தனிப்பட்ட விவகாரம்,” என்று கோத்தா திங்கியில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் காலிட் கூறியதாக ‘த ஸ்டார்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்காப்பு அமைச்சருமான திரு காலிட், லோக்கின் பதவி விலகல் முடிவை நஜிப் தொடர்பான முடிவோடு குழப்பிக்கொள்ளக் கூடாது என்று கூறினார்.

நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கி, அவரது தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் முடிவு, மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரத்திற்கு உட்பட்டது என்று திரு காலிட் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த முடிவை அம்னோ வரவேற்பதாகவும், மன்னர் பயன்படுத்தும் அதிகாரத்தை மதிக்கும் என்றும் அவர் கூறினார்.

மன்னிப்பு வழங்கும் மாமன்னரின் அதிகாரத்தை டிஏபி மதித்தாலும், நஜிப்பின் நிபந்தனை மன்னிப்பு குறித்து தங்களுக்கு ஒரு நிலைப்பாடு இருப்பதாகவும், அதைக் கட்சியால் ஏற்றுக்கொள்வது கடினம் என்றும் லோக் சனிக்கிழமை கூறினார்.

அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக மற்ற டிஏபி அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், தாம் மட்டுமே பதவி விலக முன்வருவதாக லோக் கூறினார்.

50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கு உட்பட்டு, 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை தமது தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு கடந்த வெள்ளிக்கிழமை நஜிப்பிற்கு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
பதவி விலகல்அரசியலமைப்புசெயற்குழு