சான் பிரான்சிஸ்கோ: மனிதர்களின் தற்சார்பை செயற்கை நுண்ணறிவிடம் (ஏஐ) ஒப்படைக்கத் தாம் விரும்புவதாகக் கூறப்படுவதை ஆந்த்ரோபிக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய் வியாழக்கிழமை (நவம்பர் 26) மறுத்துள்ளார்.
மேலும், அது அர்த்தமற்ற கருத்து எனத் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், செயல்திறன் அல்லது பாதுகாப்பிற்காகத் தனியுரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
ஆக்சியோஸ் ஊடகக் கட்டுரைக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘ஏஐ’ கருவிகள் மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஒட்டுமொத்த மனித இனத்தையும் அது அழிக்கக்கூடும் என ஆந்த்ரோபிக் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் இவான் ஹூபிங்கர் செப்டம்பரில் தெரிவித்திருந்தார்.
சில ‘ஏஐ’ நிறுவனத் தலைவர்கள் வெறும் முழக்கங்களை மட்டுமே கூறுவதாகத் திரு அமோடெய் சாடினார்.
முன்னதாக, சமூகத்தை ‘ஏஐ’ வசம் ஒப்படைக்கக் கூடாது என மெட்டா நிறுவனத்தின் அலெக்சாண்டர் வாங்கும் கட்டுப்பாட்டை இழப்பது மோசமானது என ஓப்பன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேனும் கூறியிருந்தனர்.
சுயமாகப் புதிய பதிப்புகளை உருவாக்கும் ‘ஏஐ’ திறனுக்கு வரம்புகள் தேவை எனப் புதன்கிழமை (நவம்பர் 25) திரு அமோடெய் ஒப்புக்கொண்டார். ஆனால், செப்டம்பரில் கிளாட் ‘ஏஐ’ தனது குறியீடுகளில் 90 விழுக்காட்டிற்கு மேல் தானே எழுதியதாக ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது.
