உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, நாட்டின் இரண்டு ஊழல் அமைப்புகளின் அதிகாரத்தை ரத்துச் செய்ய வழிவிடும் மசோதாவில் கையெழுத்திட்டிருக்கிறார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தலைநகர் கியவில் நூற்றுக்கணக்கானோர் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உக்ரேனுக்குள் ரஷ்யா படையெடுத்த பிறகு, அரசாங்கத்திற்கு எதிரான அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடைபெறுவது அரிது. உக்ரேனை உலக அளவில் ஆதரிக்கும் நாடுகளிடையிலும் அது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மசோதா, திரு ஸெலென்ஸ்கிக்குக் கூடுதல் அதிகாரத்தைக் கொடுக்கும் என்றும் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் அரசாங்கம் தலையிட அனுமதியளிக்கும் என்றும் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
உக்ரேனிய அதிபரின் அண்மை முடிவு, மிகப் பெரும் பின்னடைவு என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.
உக்ரேனிய நாடாளுமன்றத்தில் 263க்கு 13 எனும் வாக்கு எண்ணிக்கையில் மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆதரவளித்தவர்களில் பெரும்பாலோர் திரு ஸெலென்ஸ்கியின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். திரு ஸெலென்ஸ்கி, மசோதாவைப் பின்னர் சட்டமாக்குவதற்குக் கையெழுத்திட்டதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி ஊடகத்திடம் சொன்னார்.