1எம்டிபி வழக்கில் மலேசிய நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதே முக்கியம்: அன்வார்

டிபிஎஸ் வங்கியிடம் $1.25 பில்லியன் இழப்பீடு கோரிக்கை

1எம்டிபி வழக்கில் மலேசிய நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதே முக்கியம்: அன்வார்

2 mins read
ab7266cf-7bc4-467d-95e8-fbd39c089c2b
மோசடி நிதியைக் கைமாற்ற 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடையே டிபிஎஸ் வங்கியில் திறக்கப்பட்ட ஐந்து கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக 1எம்டிபி சொத்து மீட்புப் பணிக்குழு தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: பிஸினஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் 1எம்டிபி வழக்கில் இழந்த பணத்தை மீட்பதுடன், நாட்டின் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையையும் அனைத்துலக அளவில் நாட்டின் நற்பெயரையும் மீட்டெடுப்பதே முதன்மை நோக்கம் என மலேசியப் பிரதமரும் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராகிம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) தெரிவித்துள்ளார்.

இதன்தொடர்பில், தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கிக்கு எதிராக சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் நான்கு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 4.2 பில்லியன் ரிங்கிட் (S$1.25 பில்லியன்) இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளன.

நீதிமன்றத்தின் மூலம் கலைப்பு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள பிளாக்ராக் கொமோடிட்டீஸ், பிளாட்டினம் குளோபல் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் வழக்கைத் தொடுத்துள்ளன.

மலேசியாவின் 1எம்டிபி, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனங்களிலிருந்து மோசடி செய்யப்பட்ட நிதியைத் திசைதிருப்ப 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடையே டிபிஎஸ் வங்கியில் திறக்கப்பட்ட ஐந்து கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக 1எம்டிபி சொத்து மீட்புப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

‘ஜோ லோ’வின் கூட்டாளியான ‘எரிக் டான்’ எனப்படும் டான் கிம் லூங் என்பவரின் பெயரில் இயங்கிய அக்கணக்குகள் மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணம் கைமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இழப்பீட்டுக் கோரிக்கையை டிபிஎஸ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளது.

மலேசிய வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்ற இந்த இருண்ட அத்தியாயம் மீண்டும் நிகழாத வண்ணம் நிறுவனங்களின் நிர்வாகமும் பொறுப்புக்கூறலும் வலுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

1எம்டிபி விவகாரத்தால் மலேசிய அரசுக்கு இதுவரை 51.4 பில்லியன் ரிங்கிட் நிதிப் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து மீட்பு நடவடிக்கைகள் மூலம் 31.3 பில்லியன் ரிங்கிட் பெறப்பட்ட போதிலும், அரசாங்கம் இன்னும் ஏறத்தாழ 20 பில்லியன் ரிங்கிட் இழப்பைச் சுமக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆகஸ்ட் 2025ல் ஜேபிமோர்கன் சேஸ் வங்கியுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் 1.4 பில்லியன் ரிங்கிட் மலேசியச் சொத்து மீட்பு அறக்கட்டளைக் கணக்கில் சேர்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியா1எம்டிபிஅன்வார் இப்ராகிம்டிபிஎஸ்வழக்குசிங்கப்பூர்