கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அமைதிகாக்கும்படி பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கட்டான இந்தச் சூழலில் பதற்றத்தைத் தூண்டுவது பொருத்தமற்றது என்றும் அனைத்துக் கட்சிகளும் பொறுமை காத்து அறிவுடன் நடந்துகொள்ளும்படி திரு அன்வார் அறிவுறுத்தினார்.
“உயர் நீதிமன்றத்தின் முடிவை மதிக்கவேண்டும். சட்டத்தை நிலைநிறுத்துவதில் மலேசிய அரசாங்கம் உறுதியாக உள்ளது,” என்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) திரு அன்வார் அறிக்கை வெளியிட்டார்.
நீதிபதியின் தீர்ப்பை அனைத்துக் கட்சிகளும் மதிக்கவேண்டும் என்ற அவர் மேல்முறையீட்டுக்கான சட்ட ரீதியான வாய்ப்புகளும் அதில் அடங்கும் என்றார்.
எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலிலிருந்து நிறைவேற்றும்படி திரு நஜிப் முன்வைத்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து திரு அன்வாரின் கருத்துகள் வெளிவந்தன.
வீட்டுக்காவலுக்கு மாற்ற வழிவிடும் அரச உத்தரவின்படி திரு நஜிப் தமது கோரிக்கையை முன்வைத்தார். அந்த அரச உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லாது என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடிக் குற்றம், எஸ்ஆர்சி அனைத்துலக அமைப்பிடமிருந்து 42 மில்லியன் ரிங்கிட்டைக் கையாடியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது ஆகிய குற்றங்களுக்காகத் திரு நஜிப் தற்போது சிறைத் தண்டனையை நிறைவேற்றிவருகிறார்.
அதிக கவனத்தை ஈர்த்த இந்த வழக்கில் தமக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான அனைத்து வழிகளையும் திரு நஜிப் முயன்று முடித்துவிட்டார். இறுதி வாய்ப்பாக அவர் அரச மன்னிப்புக்குக் கோரியிருக்கிறார்.

