தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியான் நாடுகளுக்கு இடையே வர்த்தகங்களைப் பெருக்க அன்வார் அறைகூவல்

2 mins read
15ff008d-af47-4dc1-b634-6f891f10a655
(இடமிருந்து) மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசிய வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான், பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரேசா பி. லாஸாரோ, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சங்கியாம்போங்சா, வியட்னாம் வெளியுறவு அமைச்சர் புய் தான் சன் ஆகியோர் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி ஜூலை 9ஆம் சந்தித்தனர் - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஆசியான் உறுப்பு நாடுகள், ஒன்றுக்கொன்று உதவி, வணிகங்களைப் பெருக்கி ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் அடுத்தடுத்த வரி விதிப்பால் உலகப் பொருளியலில் நிச்சயமற்ற சூழல் நிலவும் வேளையில் அன்வாரின் அழைப்பு வந்துள்ளது.

புதன்கிழமை அன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பத்து உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

வரி விதிப்பு, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், முதலீட்டுத் தடைகள் போன்றவை புவிசார் அரசியலின் கூர்மையான கருவிகள் என்று அவர் வருணித்தார்.

ஆனால் அவர் அமெரிக்காவை நேரிடையாகக் குறிப்பிடவில்லை.

“வெளிப்புற அழுத்தங்களை நாம் கடந்து செல்லும்போது நமது அடித்தளங்களை வலுப்படுத்த வேண்டும். நமது நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை பெருக்க வேண்டும், ஆசியான் நாடுகள் அதன் மற்ற உறுப்பு நாடுகளில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும், பலதுறைகளில் ஒருங்கிணைத்து முன்னேற வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“உலகளாவிய நிலைமை நிச்சயமற்றதாக இருப்பதால் நமது வட்டாரத்தில் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டியது மிகையாகாது,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜூலை 7ஆம் தேதி ஆறு தென்-கிழக்கு ஆசியான் நாடுகளுக்கு 25 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரையிலான வரி விதிப்பை அறிவித்தார்.

சில நாடுகள் சலுகைகளை வழங்கவும் குறைந்த வரிக்கு பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்தபோதும் அமெரிக்கா வரியைக் கூட்டியுள்ளது.

ஏற்றுமதியைச் சார்ந்து இருக்கும் ஆசியான், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார வட்டாரமாகத் திகழ்கிறது.

அவற்றில் சில நாடுகள், சீனாவின் மாற்றியமைக்கப்பட்ட விநியோகச் சங்கிலியால் பயனடைந்து வருகின்றன.

வியட்னாம் மட்டுமே வெற்றிகரமாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் அந்நாட்டுக்கு ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட 46 விழுக்காடு வரி, 20 விழுக்காட்டுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வரி விதிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலாவதற்கு முன்பு இந்தோனீசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சு நடத்த மும்முரம் காட்டி வருகின்றன.

கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் ஆசியான் மற்றும் அதன் முக்கிய வர்த்தகப் பங்காளிகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையே ஏராளமான சந்திப்புகள் நடைபெறவிருக்கின்றன.

முன்னதாக மலேசியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க பல உலகத் தலைவர்கள் விரும்புவதாக அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார்.

இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த வாரம் பயணம் மேற்கொண்டபோது தலைவர்கள் தங்களுடைய விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்