புத்ராஜெயா: மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து திரு ஆண்டனி லோக் விலகுவதாக வெளிப்படையாக அறிவித்து இரண்டு வாரங்களுக்கு மேலான நிலையிலும், அவரது பதவி விலகலைத் தாம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் புதன்கிழமையன்று (நவம்பர் 25) தெரிவித்துள்ளார்.
திரு லோக்கைச் சந்தித்து அவரை விடுப்பில் போகச் சொன்னதாகத் திரு அன்வார் கூறினார்.
”நான் அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இன்னும் விடுப்பில்தான் இருக்கிறார்,” என்று கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
தற்போதைக்குத் திரு லோக்கின் பொறுப்புகளைத் தற்காலிகமாகத் தாமே ஏற்றுக்கொள்ளப்போவதாகப் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
”விதிமுறைகளின்படி பார்த்தால், போக்குரத்து அமைச்சு தொடர்பான பொறுப்புகளைக் கவனித்துக்கொள்ள தலைமைச் செயலாளரும் துணையமைச்சரும் இருக்கிறார்கள். ஆனால் தற்போதைக்குப் பிரதமரே சிறிது காலத்துக்கு அப்பொறுப்பை வகிப்பார்,” என்று பிரதமர் அன்வார் கூறினார். ஆளும் மத்திய அரசாங்கம் தற்போது தனது நான்காவது ஆண்டு நிர்வாகத்தில் உள்ள நிலையில், அரசாங்கம் தன்னால் இயன்ற சிறந்த பணிகளைச் செய்யும் என்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் என்றும் பிரதமர் அன்வார் உறுதியளித்தார்.
