கட்சி உட்பிளவுகளுக்கு இடையே நெருக்கடியை எதிர்கொள்ளும் அன்வார்

கட்சி உட்பிளவுகளுக்கு இடையே நெருக்கடியை எதிர்கொள்ளும் அன்வார்

2 mins read
2b8d119e-8b2f-47fa-998e-c4b38af064a5
மலேசியாவில் ஊழலுக்கு எதிராக இருபது ஆண்டுகளுக்குமேல் குரல் கொடுத்த திரு அன்வார் இப்ராகிம் 2022ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார். - படம்: ராய்ர்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆட்சியைத் தக்கவைப்பதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

திரு அன்வாரின் ஆளும் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் பொருளியல் அமைச்சருமான ரஃபிஸி ரம்லி, பழைய கட்சி ஒன்றுக்கு ஆக அண்மையில் புத்துயிர் அளித்துள்ளார்.

‘பெர்சாமா’ என்று அழைக்கப்படும் மலேசிய ஐக்கிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பதாகவும் திரு ரஃபிஸி அறிவித்தார்.

இந்நிலையில், திரு ரஃபிஸியின் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர 18,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்தது. அவற்றுள் மூன்றில் ஒரு பங்கு, திரு அன்வாரின் பிகேஆர் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களிடமிருந்து வந்தவை.

ஆளும் பிகேஆர் கட்சிக்கு இடையிலான விரிசல்கள் அதிகரித்தால் திரு அன்வாரால் ஆட்சியைத் தக்கவைக்க முடியாமல் போகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதன் விளைவாகத் திடீர் தேர்தலும் அறிவிக்கப்படலாம்.

இதற்கிடையே, பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் திரு அன்வாரின் நீண்டகால ஆதரவாளருமான திரு ஹசான் அப்துல் கரிம், பிகேஆர் கட்சியிலிருந்து பிற கட்சிகளுக்குச் செல்லும் உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியைக் கைவிட்டுள்ளதாகக் கூறினார்.

கட்சியில் உள்ள தலைவர்கள் உறுப்பினர்களின் அக்கறைகளுக்குச் செவி சாய்க்கவில்லை என்றும் சமூக ஊடகத்தில் அவர் குறிப்பிட்டார்.

எந்தக் கட்சியில் உறுப்பினராவது என்று இன்னும் முடிவெடுக்காதோருடன் இளையரும் மலேசியப் பொருளியலுக்கு முன்னுரிமை அளிப்போரும் மலேசிய ஐக்கிய கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவை அளிக்கக்கூடும் என்று திரு ஹசான் கூறினார்.

“ரஃபிஸிக்கு ஆதரவளிக்கும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் கட்சியிலிருந்து விலகினால் பிரதமர் அன்வார் தமது நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்,” என்று திரு ஹசான் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருபது ஆண்டுகளுக்கும்மேல் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்த திரு அன்வார், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியப் பிரதமராகப் பதவியேற்றார்.

பிரதமராகத் திரு அன்வார், மலேசியாவில் அரசியல் நிலைத்தன்மையைச் சீர்படுத்தினார். ஆனால், சொந்த ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் அவர்மீதான மதிப்பைப் பாதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்