ஜோகூர் விலங்குத் தோட்டம் பயனளிக்கும்: அன்வார் நம்பிக்கை

ஜோகூர் விலங்குத் தோட்டம் பயனளிக்கும்: அன்வார் நம்பிக்கை

1 mins read
dc84c4e9-c037-4be9-8fb0-5757aa6d1aa3
ஜோகூர் விலங்குத் தோட்டத்தின் மேம்பாடுகள் குறித்து அறிந்துகொண்டார் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம். - படம்: மலேசிய பிரதமர் அலுவலகம்

ஜோகூர் பாரு: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஜோகூர் விலங்குத் தோட்டம், பொழுதுபோக்கு இடமாக, கல்வித் தலமாக, மாநில மரபுடைமை நிலையமாக மக்களுக்குத் தொடர்ந்து பயனளிக்கும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஆக பழைமைவாய்ந்த விலங்குத் தோட்டத்துக்குச் சென்ற அவர் அவ்வாறு கூறினார். மின்சார ரயில் சேவை எண் 3ல் கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாருக்குத் திரு அன்வார் சென்றார்.

விலங்குத் தோட்டத்தில் இருந்தபோது பொதுமக்களைச் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்ததாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட திரு அன்வார், விலங்குத் தோட்டத்தின் தற்போதைய மேம்பாடுகள் குறித்து ஜோகூர் வீடமைப்பு, உள்ளூர் அரசாங்கக் குழுத் தலைவர் திரு முகமது ஜாஃப்னி முகமது ‌ஷுகோர் விளக்கம் அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜோகூர் மாநிலச் செயலாளர் திரு அஸ்மான் ‌‌‌ஷா அப்துல் ரஹ்மானும் திரு அன்வாருடன் விலங்குத் தோட்டத்துக்குச் சென்றார்.

மலேசியாவின் கூட்டரசு பிரதேச நாள், தைப்பூசத் திருநாள் ஆகியவற்றை முன்னிட்டு வரும் நீண்ட விடுமுறையில் கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாருக்குச் செல்லும் மின்சார ரயில் சேவை எண் 3ன் செயல்பாடுகளை மறுஆய்வு செய்யவிருப்பதாகத் திரு அன்வார் இதற்குமுன் தெரிவித்திருந்தார்.

ரயில் பயணிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துகளை நேரில் கேட்டறிய நல்ல வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்