எதேச்சையாகச் சந்தித்துக்கொண்ட அன்வார் இப்ராகிம், கிம் ஜோங் உன்

1 mins read
4c1cb598-fa75-451f-8eb5-e2e47f16c1a8
சீனாவில் சந்தித்துக்கொண்ட அன்வார் (இடது), கிம். - படம்: அன்வார் இப்ராகிம் / ஃபேஸ்புக்

பெய்ஜிங்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், சீனாவில் எதேச்சையாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்தித்தார் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருவரும் புதன்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்றபோது சந்தித்துக்கொண்டனர்.

“எதேச்சையாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்தித்தேன். அவரும் டியானான்மென் சதுக்கத்தில் நடந்த அணிவகுப்பைக் காண வருகை தந்திருந்தார். அவரைச் சந்தித்து வணக்கம் கூற முடிந்தது,” என்று திரு அன்வார் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இருவரும் கைகுலுக்கிக்கொள்ளும் படம் ஒன்றையும் அவர் பதிவேற்றம் செய்தார்.

திரு அன்வாரின் பதிவுக்கு ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்தோரில் பெரும்பாலோர் அவர்களது சந்திப்பை வரவேற்றனர்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த 80ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்க டியானான்மென் சதுக்கத்தில் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் பங்கேற்ற 26 வெளிநாட்டுத் தலைவர்களில் திரு அன்வார், திரு கிம் இருவரும் அடங்குவர்.

கடந்த 2021ஆம் ஆண்டு திரு கிம்மின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து மலேசிய-வடகொரிய அரசதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டன.

அதற்குப் பிறகு முதன்முறையாக இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்