சர்ச்சைக்குரிய வழிகாட்டி நெறிமுறைத் திட்டத்தைக் கைவிட்ட அன்வார் இப்ராகிம்

2 mins read
f636d2fe-550b-4bd7-84eb-5b1793ad3ab3
பத்துமலையில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: மலேசியப் பிரதமர் அலுவலகம்

கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாதோர் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முஸ்லிம்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை அறிமுகப்படுத்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

ஆனால் மலேசியாவில் உள்ள பல அமைப்புகள் அதற்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

இதையடுத்து, அந்த வழிகாட்டி நெறிமுறையை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தைப் பிரதமர் அன்வார் கைவிட்டுள்ளார்.

வழிகாட்டி நெறிமுறைகளுக்கான அவசியம் கிடையாது. முஸ்லிம்கள் என்கிற முறையில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்,” என்று வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 7) பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருநாளாகும்.

மலேசியாவின் பத்துமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர்.

இந்நிலையில், தைப்பூசத்துக்கு முன்னதாக பிரதமர் அன்வார், வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 11) உலகப் பிரசித்தி பெற்ற பத்துமலை முருகப் பெருமான் கோயிலுக்குச் சென்றிருந்தார்.

“நான் பத்துமலை கோயிலுக்கு வந்திருக்கிறேன். ஆனால் இந்து சமய வழிபாட்டு முறையில் கலந்துகொள்ளவில்லை,” என்று செய்தியாளர்களிடம் பிரதமர் அன்வார் கூறினார்.

முஸ்லிம் அல்லாதோர் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முஸ்லிம்களுக்காக வழிகாட்டி நெறிமுறைகளை அறிமுகப்படுத்த இருப்பதாக பிப்ரவரி 4ஆம் தேதியன்று மலேசிய நாடாளுமன்றம் கூடியபோது அந்நாட்டின் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சர் நயீம் மொக்தார் எழுத்துபூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் அல்லாதோரின் திருமண விழாக்கள், இறுதிச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளுக்குச் செல்லும்போது முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து அந்த வழிகாட்டி நெறிமுறைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, இஸ்லாமியர்களைத் தங்கள் நிகழ்வுகளுக்கு அழைக்க விரும்பும் முஸ்லிம் அல்லாதோர், முதலில் அதிகாரிகளிடமிருந்து அனுமதி, ஆலோசனை பெற வேண்டும்.

அத்தகைய நிகழ்வுகளில் முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் அம்சங்கள் அறவே இருக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

சமயம் தொடர்பான உரைகள், பாடல்கள் இடம்பெறக்கூடாது.

அத்துடன், இஸ்லாமியர்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது.

இந்தத் தகவல்களை அமைச்சர் நயீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இத்தகைய வழிகாட்டி நெறிமுறைகள் நாட்டில் நிலவும் சமய நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

“பல நூறு ஆண்டுகளாக மலேசியாவில் உள்ள பல இன, பல சமய மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் தங்கள் சமயப் பொறுப்புகளை நன்கு அறிந்து வைத்துள்ளனர். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அவர்களிடம் வலியுறுத்த தேவையில்லை,” என்றார் முன்னாள் அமைச்சர் ரஃபிடா அசிஸ்.

குறிப்புச் சொற்கள்