விளையாட்டு மூலம் மலேசியாவைப் பெருமைப்படுத்திய அன்வார்: ஆய்வாளர்

விளையாட்டு மூலம் மலேசியாவைப் பெருமைப்படுத்திய அன்வார்: ஆய்வாளர்

படம்: பெர்னாமா

04 Oct 2026 - 5:16 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் உலகளாவிய விளையாட்டு அரங்கில் மலேசியாவை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவர உதவுவதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு அரசதந்திரம், பொருளியல் நடவடிக்கைகள் மற்றும் மலேசியாவைப் பிரபலப்படுத்தும் அணுகுமுறை ஆகியவற்றை திரு அன்வார் கையாளும் விதத்தை அவர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் உலக அமைதி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான பேராசிரியர் டாக்டர் முகமது மிசான் முகமது அஸ்லம் தமது அறிக்கையில், அண்மைய மாதங்களில் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகள் பொதுமக்களை மகிழ்விப்பது மட்டுமின்றி, அனைத்துலக உறவுகளை வலுப்படுத்தவும் பயன்படுகிறது என்பதை மலேசிய நிரூபித்துள்ளது என்றார்.

“விளையாட்டு பெரும்பாலும் பொழுதுபோக்காகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அரசாங்கங்களுக்கு அது ஓர் அரசதந்திரம், பொருளியல் கொள்கை மற்றும் நாட்டின் பெருமை ஆகிய அனைத்தின் ஒருங்கிணைப்பாக அமைகிறது,” என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு எஃப்1 கார் பந்தயத்தை மலேசிய ஏற்று நடத்தியதும் 2026 ஃபிஃபா உலகக் கிண்ண ஒளிபரப்புகளைப் பொதுமக்கள் பெற மலேசியா மேற்கொண்ட முயற்சிகளும் நாட்டின் அனைத்துலகத் தொடர்புகளை வலுப்படுத்த விளையாட்டு எவ்வாறு பயன்படும் என்பதற்கான சான்றுகள் என்றார் அவர்.

மேற்காசியாவில் நிலவும் புவிசார் அரசியல் சூழல் காரணமாக எஃப்1 கார் பந்தயத்தை பஹ்ரைன் நடத்த முடியாமல் போனதால் அதனை மலேசியா ஏற்று நடத்தியது. அக்டோபர் 2 முதல் 4 வரை நடைபெற்ற ‘கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரீ’ பந்தயம் பற்றி திரு முகம்மது மிசான் குறிப்பிடுகையில், “விளையாட்டு ஓர் அரசதந்திரத் தளத்தை மலேசியா உருவாக்கியுள்ளது,” என்றார்.

எஃப்1 கார் பந்தயத்துக்குப் பொதுமக்களின் வரவேற்பும் மிக அதிகமாக இருந்தது. பந்தயத்தின் மூன்று நாள்களுக்கான 95,000 நுழைவுச்சீட்டுகள் செப்டம்பர் இறுதிக்குள் விற்றுத் தீர்ந்தன. இறுதி நிலவரத்தில் 100,000 நுழைவுச்சீட்டுகள் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்