மாநில, பொதுத் தேர்தல்களை அன்வார் சேர்த்து ‘நடத்தக்கூடும்’

மாநில, பொதுத் தேர்தல்களை அன்வார் சேர்த்து ‘நடத்தக்கூடும்’

2 mins read
7dfb4d34-d86c-41a5-aeb9-e65b1878f477
கெடா முதல்வர் முகம்மது சனுசி முகம்மது நூர் (இடது). - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணி ஆளும் நான்கு மாநிலங்களுக்கான தேர்தலையும் மலேசியப் பொதுத் தேர்தலையும் ஒன்றாக நடத்தப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு உடன்பாடு உள்ளதாக கெடா முதல்வர் முகம்மது சனுசி முகம்மது நூர் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்வது செலவைக் குறைக்கவும் இருமடங்குப் பணிகள் மேற்கொள்ளப்படுவதைத் தவிர்க்கவும் உதவும் என்று அவர் சொன்னார்.

பாஸ் கட்சியின் தேர்தல் பிரிவு இயக்குநரான திரு சனுசி, இந்த விவகாரத்தைப் பற்றி திரு அன்வாரிடம் பேசியதாகத் தெரிவித்தார். கெடா, கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ் ஆகியவற்றுக்கான தேர்தல்களுடன் மலேசியாவின் 16வது பொதுத் தேர்தலும் சேர்ந்து நடக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“அந்த நான்கு மாநிலங்களுக்கான தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒன்றாக நடக்கும் என்பது எனது நம்பிக்கை. அதே பணிகளை மீண்டும் மேற்கொள்ளவேண்டியிருக்காது. அப்படியிருந்தால் நேரம் வீணாகும். ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதன் மூலம் செலவை மிச்சப்படுத்தலாம். தேர்தல் ஆணையத்தின் வேலையும் சுலபமாகும்,” என்று திரு சனுசி வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இரவு செய்தியாளர்களிடம் கூறினார். கோத்தா சராங் செமுட்டில் பாஸ் கட்சியின் தேர்தல் செயல்பாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது பிறகு அவர் பேசினார்.

“தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து நான் பிரதமரிடம் பேசினேன், அவர் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

“தேர்தல் தேதி குறித்து நான் கேட்டதற்கு, அதுபற்றிப் பேசலாம் என்றும் அவர் பதிலளித்தார்,” என்றார் திரு சனுசி.

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த சென்ற பொதுத் தேர்தலின்போது கெடா, கிளந்தான், திரங்கானு ஆகியவை தங்களின் மாநில அமைச்சரவைகளைக் கலைக்கவில்லை. அதற்குப் பதிலாக 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனிப்பட்ட முறையில் மாநிலத் தேர்தலை நடத்த அவை முடிவு செய்தன.

அந்தக் காலகட்டத்தில் பாரிசான் நே‌ஷனலின் ஆட்சியில் இருந்த பெர்லிஸ், பொதுத் தேர்தலுடன் மாநிலத் தேர்தலையும் நடத்தும் நோக்கில் அதன் அமைச்சரவையைக் கலைத்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஅன்வார் இப்ராகிம்முதல்வர்தேர்தல்மாநில அரசு