டாவோஸ்: அணுசக்தியைப் பயன்படுத்தும் அவசியம் மலேசியாவுக்கு ஏற்படவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
சூரிய சக்தி, ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு ஆகியவை அதிகப் பலனளிக்கக்கூடியவை என்றும் மலேசியாவின் தேவைகளை அவை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் திரு அன்வார் கூறினார்.
இருப்பினும், பெரிய தரவு நிலையங்களை அமைக்க மலேசியா திட்டமிட்டிருப்பதாகவும் அவற்றுக்குத் தேவையான எரிசக்தியைப் பெற எதிர்காலத்தில் அணுசக்தியைப் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான தரவு நிலையங்களுக்குப் பேரளவிலான எரிசக்தி தேவைப்படும் என்றார் பிரதமர் அன்வார்.
தரவு நிலையங்களை நடத்துபவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் எனவே, அவற்றுக்கு அணுசக்தி பயன்படுத்தப்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.
அணுசக்தி பயன்பாடு குறித்து தாய்லாந்து, இந்தோனீசா, மலேசியா ஆகிய நாடுகள் பரிசீலனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்குப் போதுமான நிதி இருப்பதைக் காட்ட தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்பட முயன்று வருவதாக பிரதமர் அன்வார் கூறினார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளியல் கருத்தரங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் அன்வார் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் அன்வார் 21 முதல் 22 ஜனவரி வரை நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க சுவிட்சர்லாந்துக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.