மாஸ்கோ: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ரஷ்யாவை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதற்காக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினைப் புகழ்ந்துரைத்துள்ளார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் அவர் உறுதி கூறியுள்ளார்.
பகுதி மின்கடத்தித் துறையில் கவனம் செலுத்தும் வட்டார வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகத் திரு அன்வார் கூறினார்.
இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு மலேசியப் பிரதமர் மாஸ்கோ சென்றுள்ளார்.
ரஷ்யா அதன் சாதனைகளைப் பகிர்ந்துகொண்டால் அதனால் மலேசியாவிற்கு நன்மை விளையும் என்றார் அவர்.
முயற்சி மேற்கொள்ளும் அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைக்க அவர் இணக்கம் தெரிவித்தார்.
விண்வெளித் துறை முதல் வேளாண்-உணவுப் பாதுகாப்பில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வரை பல துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இரு நாடுகளும் கலந்துபேசி வருகின்றன.
செப்டம்பர் 4ஆம் தேதி பிரதமர் அன்வார், அதிபர் புட்டினைச் சந்தித்தார். விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்யா நடத்தும் கிழக்குப் பொருளியல் கருத்தரங்கிற்கு இடையே அவர்கள் சந்தித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சந்திப்பின்போது, “சிரமங்களை எதிர்கொண்டு, தாக்குப்பிடிப்பதற்கான உறுதியை வெளிப்படுத்தியுள்ளீர்கள் இந்த அனுபவத்திலிருந்து நாங்கள் நிச்சயம் பயனடைவோம்,” என்று திரு அன்வார் கூறினார்.
ஈராண்டுகளாகத் தொடரும் ரஷ்யாவின் உக்ரேனியப் படையெடுப்பு தொடர்பில் மேலை நாடுகள் கண்டனம் தெரிவித்தபோதும் ஆசியத் தலைவர்கள் திரு புட்டினைச் சந்தித்து வருகின்றனர். அவர்களை அடியொட்டி மலேசியப் பிரதமரும் தற்போது சந்தித்துள்ளார்.
ரஷ்யா செல்வது தொடர்பான முடிவு எளிதானதன்று எனக் கூறிய திரு அன்வார், இருப்பினும் அது சரியான முடிவு என்றார்.
‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு அக்டோபரில் நடத்தும் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள திரு புட்டின் விடுத்த அழைப்பைப் பிரதமர் அன்வார் ஏற்றுக்கொண்டார்.
அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க மலேசியா தயாராக இருப்பதாகத் திரு அன்வார் கூறினார்.
‘பிரிக்ஸ்’ அமைப்பில் இணைய முன்னுரிமை தரப்பட்டுள்ள நாடுகளில் மலேசியாவும் அடங்கும் என்பதை அவர் சுட்டினார்.
வளரும் பொருளியல்களுக்கான ஒத்துழைப்புத் தளமாக 2009ஆம் ஆண்டு பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஏற்படுத்திய அந்தக் கூட்டமைப்பில் 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைந்தது.
பின்னர் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவை கடந்த ஆகஸ்ட் மாதம் ‘பிரிக்ஸ்’ அமைப்பில் இணைந்தன.

