கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் குடலிறக்க (hernia) அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு மருத்துவமனையிலிருந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தாம் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும் படத்தை திரு அன்வார் பதிவேற்றம் செய்திருந்தார். அப்பதிவில் தாம் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிகிச்சைக்குக் பிறகு திரு அன்வார் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக முன்னதாக அவரின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு அன்வார் குடலிறக்கப் பிரச்சினைக்காகக் கட்டாயமற்ற ‘லாப்பரோஸ்கோப்பிக்’ சிகிச்சையை மேற்கொண்டார் என்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவர் வல்லுநர்க் குழு அவரை உன்னிப்பாகக் கண்காணித்துவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


