பொருள், சேவை வரியை முழுமையாக மீண்டும் கொண்டுவருவதை நிராகரித்தார் அன்வார்

பொருள், சேவை வரியை முழுமையாக மீண்டும் கொண்டுவருவதை நிராகரித்தார் அன்வார்

2 mins read
76c1c98d-cf1e-47fc-b24d-461df4926906
இவ்வாண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சில் நடைபெற்ற 2027 வரவுசெலவுத் திட்டக் கலந்துரையாடலில் பிரதமர் அன்வார் இப்ராகிம் உரையாற்றினார். - படம்: மலாய்மெயில்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவின் முதன்மை வரி வருவாயாக பொருள், சேவை வரியை மீண்டும் கொண்டுவருவதை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நிராகரித்துள்ளார்.

விரிவான அடிப்படையில் பொருள், சேவை வரியை விதிப்பது நாட்டின் குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினருக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) ‘டிக்டாக் ஷாப் உச்சமாநாடு 2026’ன் தொடக்க விழாவிற்குப் பிறகு, உள்ளூர் ஊடகங்களிடம் அவர் பேசினார்.

எந்தவொரு வரிச் சீர்திருத்தமும் சமூக சமத்துவத்திற்கு அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டுடன் ஒத்துப்போகவேண்டும் என்பதைத் திரு அன்வார் வலியுறுத்தினார்.

“விற்பனை, சேவை வரியை நடைமுறைப்படுத்துவதில் மேம்பாடு காணும் முயற்சியில் அல்லது பொருள், சேவை வரியின் சில அம்சங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமானால், அதை நம்மால் செய்ய முடியும்.

“ஆனால், மிகவும் ஏழ்மையான மக்களுக்கு வரிகளை உயர்த்தக்கூடாது என்பதே இந்த அரசாங்கத்தின் முக்கியக் கொள்கையாகும். எனவே, பொருள், சேவை வரியைக் கொள்கை அளவில் பரிசீலிக்க முடியாது,” என்று திரு அன்வார் கூறினார்.

உத்தேசக் கலப்பு வரிவிதிப்பு முறை குறித்த தொழில்நுட்ப மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் வேளையில், பிரதமரின் கருத்துகள் வெளியாகியுள்ளன.

தற்போது உள்ள விற்பனை, சேவை வரியின் கூறுகளையும் பொருள், சேவை வரியின் கூறுகளையும் இணைத்து, மேலும் செயல்திறன்மிக்க, மக்களுக்குப் பாரமில்லாத வருவாய்க் கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தை ஆய்வுசெய்யுமாறு நிதி அமைச்சுக்குத் திரு அன்வார் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

தற்போது இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அசிசான் அந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வுக்குத் தலைமை தாங்குகிறார்.

மலேசியாவின் பொருள், சேவை வரி குறித்த விவாதம், பத்தாண்டுக்கும் மேலாகச் சர்ச்சைக்குரிய அரசியல் விவகாரமாக இருந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபொருள் சேவை வரிஅன்வார் இப்ராகிம்