கெபாலா படாஸ் (பினாங்கு): மலேசியாவிற்கான எண்ணெய், எரிவாயு மற்றும் டீசல் விநியோகம் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் துர்க்மெனிஸ்தான் பயணங்களை முடித்து நாடு திரும்பிய அவர், சனிக்கிழமை (ஜூன் 20) பினாங்கில் நடைபெற்ற தொழிற்பூங்கா ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றுப் பேசினார்.
“மலேசியாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் டீசல் விநியோகம் குறைந்தபட்சம் இருபது ஆண்டுகளுக்காவது பாதுகாப்பாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் (விளாடிமிர்) புட்டின் நீண்டகால ஏற்பாடு வாயிலாக உறுதி அளித்துள்ளார்.
“இரு நாடுகளுக்கு இடையேயான நட்பின் மூலமே இது சாத்தியமாகியுள்ளது,” என்று திரு அன்வார் கூறியதாக ‘த ஸ்டார்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கசான் நகரில் ஜூன் 17, 18 தேதிகளில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) - ரஷ்யா சிறப்பு உச்சநிலை மாநாட்டில் திரு அன்வாருடன் சக ஆசியான் தலைவர்களும் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டிற்கு இடையே அதிபர் புட்டினைச் சந்தித்து திரு அன்வார் பேசினார். எரிசக்திப் பாதுகாப்பு, எண்ணெய் விநியோக ஒத்துழைப்பு, உருவெடுக்கும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றோடு இதர விவகாரங்கள் குறித்தும் அவ்விரு தலைவர்களும் கலந்து ஆலோசித்தனர்.
பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கிய பின்னர் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெற்று வந்த எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் ஆசிய நாடுகளைப் பெரிதும் பாதித்தது.
அதனால், தென்கிழக்கு ஆசிய நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையைத் தணிக்க ரஷ்யாவை நாடத் தொடங்கின.
தொடர்புடைய செய்திகள்
மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, வியட்னாம், மியன்மார் போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்க ஆர்வம் காட்டின.

