பெட்டாலிங் ஜெயா: தற்போதைய நிலையைவிட கூடுதல் வசதியாக வாழக்கூடிய அளவுக்கு மலேசியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்ட பிறகே நாட்டில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
“ஜிஎஸ்டி முறை மிகவும் வெளிப்படையானது, துரிதமானது. ஜிஎஸ்டி நடப்புக்கு வர வேண்டும் எனப் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் விரும்புகின்றன. ஜிஎஸ்டி நடப்புக்கு வரும் என்று தெரிவித்தேன். ஆனால் அதற்கு முன்னதாக மலேசியர்களின் வருமானம் உயர வேண்டும்,” என்றார் பிரதமர் அன்வார்.
அக்டோபர் 13ஆம் தேதியன்று ஒருங்கிணைக்கப்பட்ட மலேசிய சீன வர்த்தக, தொழிற்சபையின் 78வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இதுகுறித்து அவர் உரையாற்றினார்.
ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தும்போது ஏழை, பணக்காரர்கள் என அனைவரிடமிருந்தும் ஒரே மாதிரியாக வரி வசூலிக்கப்படும் என்றார் திரு அன்வார்.
இந்த அணுகுமுறை தமது அரசியல் சித்தாந்தத்துக்கும் மனசாட்சிக்கும் விரோதமானது என்றார் அவர்.
முதலில், குறைந்தபட்ச மாதச் சம்பளம் 3,000 ரிங்கிட்டுக்கும் 4,000 ரிங்கிட்டுக்கும் இடைப்பட்ட தொகையாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அதன் பிறகே ஜிஎஸ்டி நடப்புக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ள மற்ற நாடுகள் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்ததாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு செய்யும்போதும் நியாயமான வகையில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என்றும் சமுதாயத்தில் உள்ள ஏழை எளியோர் வெகுவாகப் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பிரதமர் அன்வார் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் விரிவான பொருளியல் சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மலேசியாவில் ஊழல் மற்றும் அரசியல் பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இதற்கு முன்பு மலேசியாவில் தலைவிரித்தாடிய ஊழல் பிரச்சினையைக் கட்டுப்படுத்தி நியாயமான பொருளியல் சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் அன்வார் கூறினார்.