கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், செல்வந்தர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுவதை நிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக மறுபடியும் முதலீட்டாளர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.
டீசலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அகற்றப்பட்டது குறித்து திரு அன்வார் பேசினார். அந்நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தே எடுக்கப்பட்டது என்று அவர் சுட்டினார்.
கஸானா மெகாடிரெண்ட்ஸ் (Khazanah Megatrends) எனும் மாநாட்டில் பேசிய அவர், முந்தைய அரசாங்கங்கள் செய்யத் தவறியதைத் தமது அரசாங்கம் சாதித்திருப்பதாகக் கருத்துரைத்தார். தமது அரசாங்கம் பிரச்சினையை நேரடியாக எதிர்கொண்டு அவ்வாறு செய்ததாக அவர் பெருமையாகச் சொன்னார்.
வர்த்தகச் சமூகத்திடம் திரு அன்வார் இதனைப் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
“முன்னைய அரசாங்கங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் பேச்சில் மட்டுமே நம்பிக்கை அளித்தன, செயலில் ஏதும் இல்லை. நாங்களோ அதிருப்தி ஏற்படுத்தக்கூடிய முடிவு என்று தெரிந்தும் அரசியல் ரீதியாகத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு இச்செயலை மேற்கொண்டோம்.
“தற்போதைய நிலவரம் நாட்டை நொடித்துப்போகும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பது தெரிந்தும் பிரச்சினை வேண்டாம் என்று நாங்கள் நினைத்து ஒன்றும் செய்யாதிருந்திருந்தால் அது பொறுப்பான அரசாங்கத்தின் அடையாளமாகாது, அறத்தைப் புறக்கணிப்பதாகும்,” என்றார் திரு அன்வார்.
இந்த மாற்றங்கள் பொதுமக்களுக்கு வலியையும் வேதனையையும் தருவதற்காகக் கொண்டுவரப்பட்டவை அல்ல என்று அவர் சொன்னார். பொதுமக்கள் தாங்கள் பெறவேண்டிய சலுகைகளைத் தொடர்ந்து பெறவேண்டும், உயர்மட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுபவர்கள் செலுத்தவேண்டியதைச் செலுத்தவேண்டும்; அதற்காகத்தான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திரு அன்வார் குறிப்பிட்டார்.
செல்வந்தர்களின் நலனுக்காக நடப்பில் இருக்கும் அம்சங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன் அரசாங்கம் செலவு செய்யும் முறைகளை மாற்றியமைக்கப்போவதாக திரு அன்வார் உறுதியளித்திருந்தார். அவரது கட்சியின் தேர்தல் பற்றுறுதியில் அது இடம்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
திரு அன்வார் பிரதமராகப் பதவி வகித்துள்ள கடந்த ஈராண்டுகளில் கோழி இறைச்சி, சர்க்கரை, மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு இருந்த சலுகைகளை அவரது அரசாங்கம் விலக்கிக்கொண்டது. அந்தச் சலுகைகளால் பொதுவாக செல்வந்தர்களும் பெரிய நிறுவனங்களும் மட்டுமே பயனடைந்ததாக அவர் கூறியிருந்தார்.