கோலாலம்பூர்: மலேசியாவில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பை நல்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளையில், மக்கள்நலனைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் இதற்கான தீர்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் கூறினார்.
புத்ராஜெயாவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) தொழுகைக்குப்பின் தொழுகையாளர்களுடன் இணைந்து தாம் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டதாகத் திரு அன்வார் தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இத்துயரத்திலிருந்து நாடு விரைவில் மீள இறைவனின் அருளை வேண்டுவதாக அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் மின்சாரத்தைs சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமெனப் பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
“இந்தக் கட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் பங்களிக்கும் வகையில் எரிசக்திப் பயன்பாட்டைச் சாத்தியமானவரை சிக்கனமாகக் கையாளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேவேளையில், அரசாங்கத்தின் சார்பில் அனைவரையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நான் தொடர்ந்து மேற்கொள்வேன்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பாதித்துவரும் புகைமூட்டத்திலிருந்து இறைவன் தங்களைக் காத்தருள வேண்டும் என்று கோரி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களும் சுராக்களும் சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்துமாறு பிரதமர் துறை (சமய விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி ஹசன் கேட்டுக்கொண்டார்.
புகைமூட்டத்தால் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளதால், சுகாதார அபாயங்களைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலேசியக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு நிர்வாக அமைப்பின் இணையத்தளத்தில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 32 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததாகப் பதிவானது. அதன்படி, சரவாக் மாநிலத்தில் அதிகபட்சமாக எட்டுப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூச்சிங் (174), சமரஹான் (167), செரியான் காவல் தலைமையகம் (166), சிபு (162), பின்டுலு (161), சாரிக்கே (155), ஸ்ரீ அமான் (154), காப்பிட் (153) ஆகியவை அவை என்று பெர்னாமா செய்தி தெரிவித்தது.
