பெட்டாலிங் ஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் தமது பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தை நிலைகுலைக்க நினைப்பவர்களின் அழுத்தத்திற்கு ஜனநாயகச் செயல் கட்சி (டிஏபி) பணியக்கூடாது என்று ஷாங்காய் நகரில் செய்தியாளர்களிடம் பேசியபோது பிரதமர் அன்வார் கூறினார். திரு லோக் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் மன்னிப்பு முடிவை அவர் கடுமையாக எதிர்த்தார் என்றும் திரு அன்வார் சுட்டிக்காட்டினார்.
லஞ்ச ஊழலற்ற ஆட்சிக்கும் ஊழலுக்கும் எதிரான ஜனநாயகச் செயல் கட்சியின் நீண்டகாலக் கொள்கைகளைத் தாம் மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கூட்டரசுப் பகுதிகளுக்கான மன்னிப்பு வாரியத்தின் முடிவை ஏற்பது அந்தக் கட்சியினர்க்குக் கடினமாக இருக்கலாம் எனத் தாம் உணர்வதாகவும் கூறினார்.
பதவி விலக முடிவுசெய்துள்ளது குறித்து திரு லோக்குடன் கலந்தாலோசிக்க இருப்பதாகக் கூறிய திரு அன்வார், அதே நேரத்தில் அவரது பதவி விலகல் போக்குவரத்து அமைச்சின் செயல்பாடுகளைப் பாதிக்காது என்றும் சொன்னார்.
