கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராகிமின் (படம்) செயல்பாடுகளுக்கான மதிப்பீடு ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்த 50 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில், தற்போது அது 54 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகத் தனது அண்மைய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று சுயேச்சை கருத்துக்கணிப்பு நிறுவனமான மெர்டேக்கா சென்டர் கூறியுள்ளது.
அன்வாரின் மடானி நிர்வாகம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆய்வில் பங்கேற்றவர்களும் இதற்கு முந்தைய 46 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது தற்போது 51 விழுக்காடு ஒப்புதல் மதிப்பீட்டை வழங்கியுள்ளனர்.
“முதலீடுகளை ஈர்த்தல், நாட்டின் மதிப்பைக் கூட்டுதல், அரசாங்க சேவையை மேம்படுத்துதல் முதலிய பிரதமரின் செயல்பாடுகள் குறித்து வாக்காளர்கள் பொதுவாக மனநிறைவு தெரிவித்தனர். ஆனால், நாட்டின் பொருளியல் நிலையை வலுப்படுத்தம் பிரதமரின் முயற்சிகள் தொடர்பில் கேட்கப்பட்டதற்கு கலப்பு மதிப்பீடு கிடைக்கப்பெற்றது,” என்று மெர்டேக்கா சென்டரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“மலேசிய அரசாங்கத்தின் அதிருப்தி நிலை தற்போது 47 விழுக்காட்டில் உள்ளது.
“நேர்மறை மற்றும் எதிர்மறைகளுக்கு இடையே இறுக்கமான பரவல் பெரும்பாலும் வாழ்க்கைச் செலவுகள் பற்றிய தொடர்ச்சியான கவலைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் மானிய குறைப்புகள் பற்றிய சில அழுத்தங்களால் இயக்கப்படுகிறது,” என்றும் அறிக்கை கூறுகிறது.
மேலும், வாக்காளர்களின் கவலை தொடர்ந்து நாட்டின் பொருளியலில் மையம் கொண்டிருப்பதாகவும், 65 விழுக்காட்டினர் அதுவே மலேசியா தற்போது எதிர்கொள்ளும் முதல் பிரச்சினை என்று கருதுவதாகவும் அறிக்கை மேலும் கூறியது. இந்த விகிதம் இதற்கு முன் 74 விழுக்காடாக இருந்தது.
அத்துடன், ஆய்வில் பங்கேற்றவர்களில் 53 விழுக்காட்டினர் நாடு தவறான திசையில் சென்றுக்கொண்டிருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். இந்த விகிதம் முன்பு 54 விழுக்காடாக இருந்தது.
ஒப்புநோக்க, நாடு சரியான திசையில்தான் சென்றுக்கொண்டிருப்பதாக 39 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். முன்பு இந்த விகிதம் 36 விழுக்காடாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
“நாடு தவறான திசையில் சென்றுக்கொண்டிருப்பதாகக் கருதும் காரணங்களாக, 47 விழுக்காட்டினர் பொருளியல் பிரச்சினைகள் என்றும் ஏழு விழுக்காட்டினர் அரசியல் நிலையற்றதன்மை என்றும் எட்டு விழுக்காட்டினர் திறமையற்ற அரசாங்க நிர்வாகம் என்றும் கூறினர்.
இவ்வாண்டு நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த ஆய்வில் 1,207 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

