அன்வாரின் அரசதந்திர முயற்சிகளால் ஹோர்முஸ் நீரிணை வழியாக மலேசியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி

அன்வாரின் அரசதந்திர முயற்சிகளால் ஹோர்முஸ் நீரிணை வழியாக மலேசியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி

2 mins read
92c40b5f-b298-47ca-ada9-3d8aee9111fc
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மேற்கொண்டு வரும் இடைவிடாத தொலைபேசி வழி அரசதந்திர முயற்சிகள், பல வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவை தற்போது பலனளிப்பதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக மலேசியக் கப்பல்களை அனுமதிக்க ஈரான் முன்வந்திருப்பதும் இதில் அடங்கும்.

செய்தி அறிக்கைகளின்படி, மலேசியாவின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஏறத்தாழ 50 விழுக்காடு இந்தக் குறுகியக் கடற்பகுதி வழியாகவே செல்கிறது.

பிரதமர் அன்வார், ஈரான் அதிபர் மசூது பெசெஷ்கியானுடன் தொடர்புகொண்டு பேசினார். அதே வேளையில், மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் தனது ஈரானியப் பிரதிநிதி அப்பாஸ் அராக்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் விளைவாக, கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் நான்கு கப்பல்கள் உட்பட மொத்தம் ஏழு கப்பல்கள் மலேசியா திரும்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்தக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகவும் எவ்வித கட்டணமின்றியும் செல்ல அனுமதிக்கப்படும் என்று மலேசியாவுக்கான ஈரானியத் தூதர் வலியுல்லா முகம்மதி நஸ்ரபாடி தெரிவித்துள்ளார்.

2026 மார்ச் மாத இறுதியில் வெளியான அறிக்கைகளின்படி, ஹோர்முஸ் நீரிணையில் பயணம் செய்யும் கப்பல்களிடமிருந்து ஈரான் போக்குவரத்துக் கட்டணம் அல்லது “சுங்கம்” வசூலிக்கத் தொடங்கியுள்ளதாகவும் ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வசூலிக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே, அரசதந்திர முயற்சிகள் மூலம் மலேசியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி பெற்றிருப்பதை மலேசியாவுக்குக் கிடைத்திருக்கும் அடையாளப்பூர்வமான வெற்றி மட்டுமல்ல, புவிசார் அரசியல் சாதனையும்கூட என்று மலேசிய ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன. மலேசியா எப்போதும் தனது நடுநிலைமைக் கொள்கையில் உறுதியாக இருப்பதை அவை சுட்டின.

குறிப்புச் சொற்கள்