கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிகாரபூர்வ பங்ளாதேஷ் பயணம், அந்நாட்டுடனான ஒருமைப்பாட்டை குறிக்கிறது.
பங்ளாதேஷ் நாட்டின் மலேசியத் தூதர் ஹஸ்னா முஹமட் ஹஷிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பங்ளாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் அந்நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறை என்றும் அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) அன்வார் பங்ளாதேஷுக்குப் பயணம் மேற்கொண்டார். அன்று மாலையே அவர் நாடு திரும்ப திட்டமிடப்பட்டது.
“பங்ளாதேஷ் 1972 ஜனவரி 31ஆம் தேதி சுதந்திரமடைந்தது.
“அப்போது பங்ளாதேஷின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் முஸ்லிம் நாடு மலேசியா,” என்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பங்ளாதேஷ் இடைக்கால அரசாங்கத் தலைவர் முஹம்மது யூனுசுடன் திரு அன்வார் இருதரப்பு பேச்சில் ஈடுபட்டார்.
வெள்ளிக்கிழமை மாலை கோலாலம்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு அதிபர் முகம்மது ஷஹாபுதீனைச் சந்திப்பார் என்று ஹஸ்னா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2023ஆம் ஆண்டில் பங்ளாதேஷ், மலேசியாவின் 27வது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் 19வது ஆகப்பெரிய ஏற்றுமதி நாடாகவும் 47வது ஆகப்பெரிய இறக்குமதி நாடாகவும் இருந்தது.
அந்த வகையில், தெற்காசிய நாடுகளில் மலேசியாவின் 2வது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக பங்ளாதேஷ் விளங்கியது.
கடந்த ஆண்டு மலேசியாவுக்கும் பங்ளாதேஷுக்கும் இடையிலான மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 12.7 பில்லியன் ரிங்கிட்டாகும்.