கோலாலம்பூர்: மக்களின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு சக்தியும் சமரசமின்றி வேரோடு அழிக்கப்பட வேண்டும் என மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆணை பிறப்பித்துள்ளார்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் ஃபேஸ்புக் வழியாக சனிக்கிழமை (மார்ச் 21) பகிரப்பட்ட தமது 2026 நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில், கடந்த ஆண்டு உரையில் தாம் வழங்கியிருந்த அறிவுரையை மாமன்னர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அந்த அறிவுரை தற்போது பொதுமக்களால் மறக்கப்பட்டதாகவோ அல்லது புறக்கணிக்கப்பட்டதாகவோ தெரிகிறது.
“கவலைகளும் எச்சரிக்கைகளும் எழும்போது சட்ட நடவடிக்கை எடுப்பது அல்லது சமூகத் தலைவர்களிடையே கலந்துரையாடுவது மட்டுமல்லாமல், மக்களின் அன்றாட வாழ்வில் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க் வேண்டும். அது அவ்வப்போது பேணி வளர்க்கப்பட்டு, தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்,” என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
நாகரிகம் மற்றும் ஒழுக்கம் என்ற கொள்கையையும் உள்ளடக்கிய தேசிய கோட்பாட்டின் ஐந்து கொள்கைகளை மலேசியர்கள் மறந்துவிடக்கூடாது என்று மாமன்னர் நினைவூட்டினார்.
“வெவ்வேறு சமூகங்களுக்கு இடையிலோ அல்லது ஒரே சமூகத்திற்குள்ளேயோ, முரட்டுத்தனமான நடத்தைகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று மாமன்னர் ஆணையிட்டார்.
பெரும்பாலான மலேசியர்கள் அன்றாட வாழ்வில் சரியான பண்புகளுடன் நடந்துகொள்ளத் தெரிந்தவர்கள் என்றும், நாகரிகம் இல்லாதவர்களின் குரல்களை அடக்கி, இந்தப் பெரும்பான்மையினரின் குரல் மேலோங்க வேண்டும் என்றும் மாமன்னர் நம்புகிறார்.
மற்ற நாடுகள் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், நாடு அனுபவித்து வரும் அமைதிக்காக மலேசியர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். ஒற்றுமையே பலம், பிரிவே பலவீனம் என்ற பழமொழியை அனைவருக்கும் நினைவூட்டுகிறேன்,” என்று மாமன்னர் கூறினார்.
மேலும், அதிகாரிகள் நுட்பமான பிரச்சினைகளைக் கையாளும்போது, பிழைக்கு இடமளிக்காமல், தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் முழுமையாகக் கருத்தில் கொண்டு, விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நாட்டின் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை சிதைந்துவிடாமல் இருக்க, எடுக்கப்படும் நடவடிக்கைகள் நியாயமானவை, உறுதியானவை மற்றும் துல்லியமானவை என்பதை நிரூபிக்க வேண்டும்,” என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

