யூன் கைதாவதைத் தடுப்போர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கலாம்

2 mins read
657ab48d-3f4c-4682-9cec-30707205861c
தென்கொரிய அதிபர் இல்லத்துக்கு வெளியே திரண்ட திரு யூனின் ஆதரவாளர்கள். - படம்: ஏஎஃப்பி

சோல்: இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் இம்மாதம் ஆறாம் தேதிக்குள் கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டின் விசாரணை அதிகாரிகள் புதன்கிழமையன்று (ஜனவரி 1) தெரிவித்தனர்.

அன்றைய தினம்தான் திரு யூனுக்குப் பிறப்பிக்கப்பட்ட கைதாணையின்படி அவரைக் கைது செய்வதற்கான கெடுவாகும். திரு யூனின் அதிபர் இல்லத்துக்கு வெளியே அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் திரு யூன் ராணுவ ஆட்சி சட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து அவர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் இருமுறை நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடந்தது. இரண்டாம் வாக்கெடுப்பு அவருக்குச் சாதகமாக அமையவில்லை.

அதன் பின்னர் திரு யூன் தற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்பட்டார். திரு யூனிடம் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் பலர் அதிபர் இல்ல வளாகத்துக்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு திரு யூன் முன்றாவது முறையாக விசாரணையில் பங்கேற்க மறுத்தார். அதனையடுத்து அவர் கைது செய்யப்படுவாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

ஜனவரி ஆறு கெடுவுக்குள் திரு யூன் கைது செய்யப்படுவார் என்று தென்கொரிய ஊழல் விசாரணை அலுவலகத் தலைவர் ஓ டோங் வூன் புதன்கிழமையன்று கூறினார். கைது நடவடிக்கைகளைத் தடுப்போரும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கக்கூடும் என்றும் திரு ஓ டோங் வூன் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, திரு யூனுக்கு உதவியாக இருந்த மூத்த அதிகாரிகள் பலர் தங்களின் பதவியிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.

திரு யூன் விவகாரத்தில் முடிவெடுக்கும் நீதிமன்றத்துக்கு தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங் மொக், புதிய நீதிபதிகள் இருவரை நியமித்தார். அதற்கு திரு யூனின் தரப்பு அதிருப்தி தெரிவித்த மறுநாளான புதன்கிழமையன்று அவரின் மூத்த உதவியாளர்கள் பதவி விலக முன்வந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்