ஜகார்த்தா: இந்தோனீசியாவின் போர்னியோ தீவில் உள்ள அடர்ந்த காடுகளில் பரவிவரும் காட்டுத்தீயால், அழியும் நிலையில் இருக்கும் போரினியோ மனிதக் குரங்குகளுக்குப் பேரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்தோனீசியாவின் போர்னியோ, சுமத்ரா தீவுகளில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ தொடர்ச்சியாக எரிந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான புகைமூட்டம், அண்டை நாடுகளான மலேசியாவையும் சிங்கப்பூரையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
போர்னியோ தீவின் மனிதக் குரங்கு எண்ணிக்கையில் 52 விழுக்காட்டு உயிரினங்கள் வாழும் முக்கிய வாழிடங்களில் தற்பொழுது தீ பரவி வருகிறது. அடர்ந்த புகையைத் தொடர்ச்சியாகச் சுவாசிப்பதால், மனிதக் குரங்குகளின் நோயெதிர்ப்புச் சக்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அவற்றின் இயல்பு வாழ்க்கைக்கும் உடல்நலனுக்கும் கேடு ஏற்படுகிறது.
மேலும் போர்னியோ, சுமத்ராவில் வாழும் ஐந்து வகையான கிப்பன் குரங்கு இனங்களின் வாழிடங்களிலும் தீ பரவியுள்ளது. மனிதர்களைப் போலவே அவையும் கடுமையான சுவாசப் பாதிப்புகளையும் வாழிட இழப்பையும் எதிர்கொள்கின்றன.
இதுவரை 53 மனிதக் குரங்குகள் உட்பட 100 விலங்குகளை வனத்துறை அமைச்சு மீட்டுள்ளது. அவசர நடவடிக்கைகளுடன் நிற்காமல் கருகிய நிலங்களைப் பாதுகாத்தல், சதுப்புநிலங்களை ஈரமாக்குதல், காடுகளை மீளமைத்தல் போன்ற நீண்டகாலத் தடுப்பு நடவடிக்கைகளை இந்தோனீசிய அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
