மலேசியத் துணைப் பிரதமருக்கு எதிரான மேல்முறையீடு மீட்டுக்கொள்ளப்பட்டது

1 mins read
e9d936c7-4a85-48f7-abd5-9ed3491d4c4e
வியாழக்கிழமையன்று புத்ரா ஜெயாவிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியே வந்த மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி (நடுவில்). - படம்: இபிஏ

கோலாலம்பூர்: லஞ்சக் குற்றச்சாட்டுகளிலிருந்து மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிட் விடுவிக்கப்பட்டதை எதிர்த்துச் செய்த மேல்முறையீட்டை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மீட்டுக்கொண்டனர்.

தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் திரு ஸாஹிட் முன்னிலையாகி விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, புத்ரா ஜெயாவிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராகத் தொடுத்த வழக்கு மீட்டுக்கொள்ளப்பட்டது.

அதனையடுத்து, அந்த மேல்முறையீட்டு மனுக்களை ரத்து செய்வதாக மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு தெரிவித்தது.

வெளிநாட்டு விசா முறைக்கும் சீனாவில் மலேசியாவிற்கான சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் உள்ளூர் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்கியதாக கடந்த 2019ஆம் ஆண்டு திரு ஸாஹிட்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஆயினும், அவர்மீதான குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்க போதிய சான்றுகளைச் சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறி, கடந்த 2022 செப்டம்பரில் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இந்நிலையில், “இவ்வழக்கை முழுமையாக ஆராய்ந்த பிறகு, திரு ஸாஹிட் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கியதற்கு எந்தச் சான்றும் இல்லை என்பதைத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் கண்டறிந்தது,” என்று வியாழக்கிழமையன்று (டிசம்பர் 12) அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் யுசைனி அமிர் அப்துல் கரீம் தெரிவித்தார்.

இவ்வழக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைத்துவிடலாம் என்ற அபாயம் நிலவிய வேளையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பது ஆளும் தரப்பினருக்கு நிம்மதி அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்