ஈரான் வான்வெளியைத் தவிர்க்கும்படி விமான நிறுவனங்களுக்கு வேண்டுகோள்

2 mins read
9fc4c7b5-dd5d-44a5-bb2e-eb68e2819625
ஈரானில் நடைபெற்ற போராட்டத்தின்போது டெஹ்ரானின் சடேகியே சதுக்கத்தில் எரிக்கப்பட்ட பேருந்து. - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: ஈரான் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்கா விடுத்துள்ள அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஈரான் வான்வெளியைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றிய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

“அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதற்கான சாத்தியம் ஈரானின் ஆகாயத் தற்காப்புப் படைகளை உச்சகட்ட விழிப்புநிலையில் வைத்திருக்கிறது. எனவே, ஆகாயவெளியில் பறக்கும் விமானங்களைத் தவறாக அடையாளம் காண்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

“பலதரப்பட்ட ஆயுதங்களும் ஆகாயத் தற்காப்புக் கருவிகளும் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

“அத்துடன், கணிக்க இயலாத சமாளிப்பு நடவடிக்கைகளும் தரையிலிருந்து ஆகாயத்துக்கு தாக்குதல் ஆயுதங்கள் ஏவப்படுவதற்கான சாத்தியமும் அந்த வட்டார வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்தி உள்ளன,” என்று ஐரோப்பிய ஒன்றிய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் தனது வான்வெளியை கடந்த புதன்கிழமை (ஜனவரி 14) மூடியது. இருப்பினும், சில மணி நேரங்களில் அதனை அது மீண்டும் திறந்தது.

முன்னதாக, ஈரானில் வாழ்க்கைச் செலவின சிரமங்களோடு தொடர்புடைய மக்களின் போராட்டம் டிசம்பர் 28ஆம் தேதி வெடித்தது.

கடந்த 1979ஆம் ஆண்டு இஸ்லாமியக் குடியரசாக ஈரான் உதயமான பின்னர், சமயத் தலைமைத்துவத்துக்கு எதிரான ஆகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக அது உருவெடுத்தது.

அதில் குறைந்தபட்சம் 3,428 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக நார்வேயைச் சேர்ந்த ஈரான் மனித உரிமை அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

“இருப்பினும், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. அதேநேரம் 10,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன,” என்று அந்த அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களைத் தூக்கிலிடும் திட்டத்தை ஈரான் கைவிடாவிட்டால், அதன்மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கடந்த புதன்கிழமை அமெரிக்கா கடுமையாக எச்சரித்தது.

அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அந்த வட்டாரத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து வளைகுடா நட்பு நாடுகளும் எச்சரித்தன. ராணுவ நடவடிக்கை எதனையும் அமெரிக்கா இன்னும் தொடங்காவிட்டாலும், அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அது சொல்லி வருகிறது.

குறிப்புச் சொற்கள்